Published : 27 Sep 2020 06:51 AM
Last Updated : 27 Sep 2020 06:51 AM

மும்பையில் கங்கனா ரனாவத் பங்களா இடிப்பு: மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மும்பை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் திரையுலகத்தினரை நடிகை கங்கனா வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மேலும் மும்பை நகரம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என்றும் விமர்சித்தார். இதனால் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் பங்களா, சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது என்று கூறி அதன் ஒரு பகுதியை 2 வாரங்களுக்கு முன்பு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்து ரூ.2 கோடி இழப்பீடு அளிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகை கங்கனா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஷாருக் ஜிம் கதவாலா, ரியாஸ் இக்பால் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “சட்டவிதிகளை மீறிய அனைத்து கட்டிடங்கள் வழக்கிலும் இப்படித்தான் அவசர அவசரமாக வீடுகள் இடிக்கப்பட்டதா? இந்த வீட்டை மட்டும் இடிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் அவசரம் காட்டியது ஏன்? நடிகை கங்கனாவுக்கு போதிய அவகாசத்தை மாநகராட்சிகள் அதிகாரிகள் தர மறுத்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அரசு, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள், கங்கனா சார்பில் தாக்கல் செய்த ஆவணங்களை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x