Last Updated : 26 Sep, 2020 07:13 PM

 

Published : 26 Sep 2020 07:13 PM
Last Updated : 26 Sep 2020 07:13 PM

’’எஸ்.பி.பி. சாரிடம் ‘கம்பன் ஏமாந்தான்’, ‘பாரதி கண்ணம்மா’ பாடச் சொல்லி ரசித்தேன்;  ’பாப்புலர் எஸ்.பி.பி. யாரோ’ என்பது போல் எளிமையாக இருப்பார் எஸ்.பி.பி. சார்’’ - இயக்குநர் வஸந்த் உருக்கம் 

’’எஸ்.பி.பி. சாரிடம் ‘கம்பன் ஏமாந்தான்’, ‘பாரதி கண்ணம்மா’ பாடச் சொல்லி ரசித்தேன்; ’பாப்புலர் எஸ்.பி.பி. யாரோ’ என்பது போல் மிகவும் எளிமையாக இருப்பார், எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார் எஸ்.பி.பி. சார்’’ என்று இயக்குநர் வஸந்த் உருக்கத்துடன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், 25ம் தேதி காலமானார். அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை செங்குன்றம் அருகில் உள்ள தாமரைப் பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில், அவரின் உடல் 72 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் வஸந்த் எஸ்.சாய் (இயக்குநர் வஸந்த்), ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு எஸ்.பி.பி.யுடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
தமிழ்த் திரையுலகிற்கும் இசையுலகிற்கும் எஸ்.பி.பி.யின் மறைவு மிகப்பெரிய இழப்பு. எனக்கு கூடுதலாக வருத்தம்... கடந்த 45 நாட்களாக, மருத்துவமனையில் எஸ்.பி.பி. இருக்கும்போது, நம்பிக்கை இருந்தது. திரும்பி நலமுடன் வந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அது நடக்கவில்லை. இதுதான் எனக்கு மிகப்பெரிய ஷாக்காக இருந்தது.

எஸ்.பி.பி. சாரின் மறைவுச் செய்தியைக் கேட்டதிலிருந்து மனசே சரியில்லை. நினைக்க நினைக்க வருத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தாங்கமுடியாத பேரிழப்பு இது. எஸ்.பி.பி. சார் பாடகர் மட்டுமில்லை. ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் மிகப்பெரிய திறமைசாலி. அவரளவுக்குப் பாடமுடியாது. இருபத்தி ஐந்து நிமிடத்தில், ஒருபாடலைக் கற்றுக் கொண்டு பாடிவிடுவார்.

எவ்வளவு மிகச்சிறந்த, கடினமான பாடலாக இருந்தாலும் ஒருநாளைக்கு பதினெட்டு பாடல்கள், இருபது பாடல்களெல்லாம் பாடியிருக்கிறார். இதெல்லாம் அசாத்திய திறமைசாலிகளால் மட்டும்தான் பண்ணமுடியும். இவரைப் போல் எத்தனை பேர் இப்படிப் பண்ணியிருப்பார்கள் என்று தெரியாது.

கர்நாடகத்தில், பெங்களூருவில், ஒரு ஞாயிற்றுக்கிழமை அங்கே போய், இருபது பாடல்களைப் பாடிவிட்டு வருவார் எஸ்.பி.பி. அவருக்காக, அந்த வாரம் முழுவதும் எல்லா ரிக்கார்டிங்கிலும், டம்மி வாய்ஸ் போட்டுட்டோ, ட்ராக் வாய்ஸ் எடுத்துட்டோ காத்திருப்பார்கள். ஒரேநாள் போய் அத்தனைப் பாடல்களையும் பாடிவிட்டு வருவார்.
அது கன்னடமா, தமிழா, மலையாளமா, இந்திப் பாடலா, தெலுங்குப் பாடலா எந்தப் பாடலாக இருக்கட்டும். அப்படியொரு உச்சரிப்பு ஸ்பஷ்டமாக இருக்கும். எனக்குத் தெரிந்து பாவம்ங்கறது எஸ்.பி.பி. அளவுக்கு யாரும் பெஸ்ட் கிடையாது என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு, காதல் ரசமாக இருந்தாலும் சரி, நகைச்சுவையாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி,உணர்ச்சி பொங்கப்பாடியிருப்பார்.

‘அக்னிசாட்சி’யில் ‘கனாக்காணும் கண்கள் மெல்ல’, ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் ‘தீர்த்தக்கரைதனிலே’ பாடல்களைக் கேட்டு கண் கலங்காமல் இருக்கமுடியாது. ’சிம்லா ஸ்பெஷல்’ படத்தின் ‘உனக்கென்ன மேலே நின்றாய்’ பாட்டை என்ன சொல்வது? அவ்வளவு பெரிய சிறந்த பாடகர். மிகப்பெரிய திறமைசாலி.

எஸ்.பி.பி. சாரின் அதிர்ஷ்டம்... கடவுள் கொடுத்த வரம் என்னவென்றால்... இப்போது அவருக்கு 75 வயது. மருத்துவமனைக்குச் செல்வதற்கு ஒருமாதத்துக்கு முன்பு வரை அவர் கலந்துகொண்ட அத்தனை கச்சேரிகளிலும் அவர் பாடிய அத்தனை மேடைகளிலும் அவருக்கு நாற்பது வருடங்களாக, ஐம்பது வருடங்களாக என்ன குரல் இருந்ததோ அதே குரல் இருந்தது என்பது கடவுள் கொடுத்த வரம். அவர் குரல் கொஞ்சம் கூட மாறவே இல்லை.

நானே கூட ஒரு மேடையில் சொன்னேன்... ’இப்போது இந்தப் பாடலை சி.டி.யில் இருந்து கேட்டோமா? அல்லது இவரே இங்கே பாடினாரா? முப்பது வருடங்களுக்கு முன்பு பாடிய பாடலைக் கூட, எப்படி இவரால் இப்போதும் அதே மாதிரி பாட முடிகிறது’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டேன்.

கடந்த 2019ம் வருடம் எனக்கு லக்கி வருடம் என்றுதான் சொல்வேன். மேடையில் அவருடன் இரண்டு முறை இருந்தேன். ‘கேளடி கண்மணி’யின் 29வது ஆண்டை, அவரும் நானும் திருப்பூரில் கொண்டாடினோம். அதற்காக நானும் அவரும் காலையில் கிளம்பி, விமானத்தில் சென்று, ஒருநாள் முழுவதும் அவருடன் இருந்தேன். அன்றைக்கு, இந்த எளிய ரசிகனின் சிறிய வேண்டுகோளாக, எனக்கு இரண்டு மூன்று பாடல்களைப் பாடினார். ‘நீ பாதி நான் பாதி’யில் வரும் ‘நிவேதா’ பாட்டு, ‘கம்பன் ஏமாந்தான்’, ‘பாரதி கண்ணம்மா’... இதெல்லாம் எனக்காகப் பாடியதை மறக்கவே முடியாது. இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எஸ்.பி.பி. சார் எளிமையான மனிதர். எந்தக் காலத்திலும் புகழை அவர் தன்னுடைய தோளில் சுமந்ததே இல்லை. ’வேறு யாரோ எஸ்.பி.பி’ எனும் அளவுக்கு சிம்பிளாக இருப்பார். அவ்வளவு கிரேட் மேன் எஸ்.பி.பி.சார்.

எஸ்.பி.பி.சாரின் எளிமையும் அவர் மற்றவர்களுக்கு உதவுகிற குணமும் கண்டு வியந்திருக்கிறேன். இதை மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். எஸ்.பி.பி. அளவுக்கு இவ்வளவு பெரிய புகழைக் கொண்டவர்கள் இத்தனை எளிமையாக எவராவது இருப்பார்களா, இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. எல்லோரிடமும் வயது வித்தியாசமில்லாமல், எளிமையாகப் பழகுவார். இனிமையாகப் பேசுவார்.

89 மற்றும் 90ம் ஆண்டில், ‘கேளடி கண்மணி’ படத்தில் ஹீரோவாக, முக்கியமான கேரக்டரில் நடித்தார். அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்... ஒருநாளில், எட்டு ரிக்கார்டிங் இருக்கும். அந்த ரிக்கார்டிங்கில் பாடிவிட்டு வந்து எனக்கு நடிப்பார். அப்படியில்லையெனில், எனக்கு நடித்துக் கொடுத்துவிட்டு எட்டுப் பாடல்களுக்கான ரிக்கார்டிங்கை முடித்துக் கொடுக்கச் செல்வார். இங்கே இருக்கிற கஷ்டத்தை அங்கே காட்டமாட்டார். அங்கே இருக்கிற டென்ஷனை இங்கே காட்டமாட்டார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். எல்லோரிடமும் ப்ளசெண்ட்டா இருப்பார்.

நான் அவரிடம் கவனித்த இன்னொரு விஷயம்... சினிமாவின் நுணுக்கங்களை முழுவதுமாகத் தெரிந்தவர் அவர். அவ்வளவு தெரிந்தவர்... அவ்வளவு ரசித்து சினிமாவைப் பார்ப்பவர். அவர் ஏன் டைரக்ட் பண்ணாம இருக்கார் என்று அவரிடமே சொல்லியிருக்கிறேன்.’’

இவ்வாறு இயக்குநர் வஸந்த் நெகிழ்ச்சியுடன் எஸ்.பி.பி. உடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x