Published : 26 Sep 2020 01:08 PM
Last Updated : 26 Sep 2020 01:08 PM
கரண் ஜோஹரின் பார்ட்டி வீடியோ பற்றி பேசும் ஊடகங்களைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனைக் கும்பலுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும், சுஷாந்த் சிங்குக்கு அவர் போதைப் பொருட்களை வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட என்சிபி அதிகாரிகள், ரியா சக்கரவர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரதா கபூர், ரகுல் ப்ரீத் உள்ளிட்ட பலருக்கும் என்சிபி சம்மன் அனுப்பி வருகிறது.
இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட நாள் முதலே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களில் கரண் ஜோஹரும் ஒருவர். சுஷாந்துக்கு கரண் ஜோஹர் பட வாய்ப்புகளை மறுத்து வாரிசு நடிகர்களுக்கே முன்னுரிமை கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு கரண் ஜோஹரின் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகவும், இதனால் போதைப் பொருள் வழக்கில் கரண் ஜோஹருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற ரீதியில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு கவிஞரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''ஒருவேளை கரண் ஜோஹர் தன் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு சில விவசாயிகளை அழைத்திருந்தால் இந்த டிவி சேனல்களுக்கு வாழ்க்கை மிகவும் எளிதாக இருந்திருக்கும். விவசாயிகளின் போராட்டம், கரண் ஜோஹரின் பார்ட்டி இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பமும் அவர்களுக்கு இருந்திருக்காது. டிவி சேனல்களுக்குப் பிடித்த இரண்டாவது ‘பார்ட்டி’ கரண் ஜோஹர்தான் போலிருக்கிறது''.
இவ்வாறு ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT