Published : 25 Sep 2020 09:16 PM
Last Updated : 25 Sep 2020 09:16 PM
இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம் என்று எஸ்பிபி மறைவு குறித்து மோகன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், பாடும் நிலா நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்வித்தவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்.
எஸ்பிபி சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப் பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சி. முதல் பாடலிலிருந்து கடைசியாகப் பாடிய பாடல் வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும். அதேபோல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்குத் தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்பிபி சார். அது மிகவும் அபூர்வம். அந்த அளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாகப் பழகக்கூடியவர்.
எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவதுபோல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்குப் பெருமையான விஷயம்.
இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுத்துக்கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்”.
இவ்வாறு மோகன் தெரிவித்துள்ளார்.
மோகன் நாயகனாக நடித்த பல படங்களில் பாடியுள்ளார் எஸ்பிபி. அவை அனைத்துமே வெற்றிப் பாடல்கள். இளையராஜா - எஸ்பிபி - மோகன் மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT