Published : 25 Sep 2020 11:04 AM
Last Updated : 25 Sep 2020 11:04 AM
கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் நடிகர் ராமராஜன். முதல்வர், துணை முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான தொற்று என்றும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது, ராமராஜன் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"சில நாட்களுக்கு முன்பு எனக்கு கரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிவதைக் கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.
உயர்தர சிகிச்சை அனைவருக்கும் அங்குக் கிடைக்கிறது. இதற்காக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குச் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு வந்து விட்டேன். இந்த இடைபட்ட நாட்களில் எனக்காகப் பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு ராமராஜன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT