Published : 23 Sep 2020 08:47 PM
Last Updated : 23 Sep 2020 08:47 PM
’’கலைமணி, கலைஞானம், செல்வராஜ் மூணுபேருக்கும் படம் போட்டுக்காட்டாம, படத்தை ரிலீஸ் பண்ணமாட்டேன். ‘16 வயதினிலே’ இசையும் காட்சியும் ஒண்ணா கைகோர்த்தமாதிரி இசையமைச்சு பிரமாதப்படுத்தியிருந்தான் இளையராஜா’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா, தன் வாழ்க்கை அனுபவங்களையும் திரையுலக அனுபவங்களையும் ‘என் இனிய தமிழ்மக்களே’ எனும் இணையதள சேனலில் தெரிவித்துள்ளார்.
’16 வயதினிலே’ படத்தின் கதை என்னுடையது என்றாலும் எளிமையாகவும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் எழுதியது என் நண்பன் கலைமணி. பெரும்பாலான புகழ், ‘16 வயதினிலே’ படத்திற்குக் கிடைத்த புகழ், கலைமணிக்குப் போய்ச்சேரவேண்டியது. இன்றைக்கும் கூட ரஜினி சொல்லுவார்...’பட்டிதொட்டியெங்கும் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது ‘16 வயதினிலே’தான். ‘இது எப்படி இருக்கு?’ங்கற வசனம்தான்’ என்று சொல்லுவார். அந்த வசனத்துக்குச் சொந்தக்காரர் கலைமணி.
படத்தில் பல இடங்களில் பிரமாதமாக எழுதியிருப்பார். ஒரு சின்ன சீன்... ’நீ எம் மேல வைச்சிருக்கறது பாசமா? பயமா? பாசமா இருந்தா பக்கத்துல உக்காரு. பயமா இருந்தா போ’ என்று வசனம் எழுதினார். இதுமாதிரி சின்னச்சின்ன காட்சிகளுக்கு அற்புதமாக வசனம் எழுதினார் கலைமணி. இப்போது அவரில்லை. நான் படம் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், கலைமணி, ஆர்.செல்வராஜ், கலைஞானம் மூன்று பேருக்கும் போட்டுக்காட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யமாட்டேன்.
இரண்டாவது விஷயம்... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோரும் நடித்துக் கொடுத்தார்கள், காந்திமதி அக்கா உட்பட! எந்த வசதியும் கொடுக்கவில்லை யாருக்கும். அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தின் வெற்றிக்கு எல்லோருமே தியாகம் செய்தார்கள். இல்லையென்றால், ஐந்து லட்சம் ரூபாயில் இப்படியொரு படம் எடுக்கமுடியுமா?
படமெல்லாம் முடிந்தது. ரீரிக்கார்டிங் பண்ணவேண்டும். இளையராஜா. ஹேட்ஸ் ஆஃப் டூ இளையராஜா. அதற்கு முன்பு எவ்வளவோ படங்கள் வாசிச்சிருக்கான் இளையராஜா. எப்போதுமே படத்தை ஒருமுறை பார்ப்பார்கள். படம் பார்த்துவிட்டு, ஒரு ரீலைப் போடுவார்கள். அந்த ரீலுக்கு என்ன பண்ணவேண்டுமோ அதற்கு நோட்ஸ் எடுப்பார்கள்.
பிரசாத் ஸ்டூடியோவில், ஒரு தியேட்டர். இப்போது இல்லை. அதில் படம் பார்த்துவிட்டு, பார்த்துக்கொண்டே நோட்ஸ் எழுதினான். மறுநாள் ரிக்கார்டிங். ’இந்தப் படம் வித்தியாசமாக இருக்குய்யா’ என்று சொன்னான். ’எப்படிய்யா உனக்கு இந்த ஐடியாவெல்லாம் வருது’ என்று கேட்டான். அவனும் நானும் ஒன்றாகவே பயணப்பட்டவர்களில்லையா? ’செந்தூரப்பூவே’வை சொன்னேன். வித்தியாசமாக இருக்கவேண்டும் என்றேன். வித்தியாசமான நோட்ஸெல்லாம் போட்டு, பிரமாதப்படுத்தினான். இன்றைக்கும் அந்தப் படத்தின் ரீரிக்கார்டிங்கைக் கேட்டாலே, காட்சிகளெல்லாம் கண்ணுக்குள் வரும்.
‘சோளம் வெதக்கையிலே’ என்று டைட்டில் ஆரம்பிக்கும். இசையை மட்டும் கேளுங்கள், காட்சி தெரியும். இசையை சைலண்ட் செய்துவிட்டு, காட்சிகளைப் பாருங்கள். இசை காதுக்குள் கேட்கும். அப்படி இருக்கும்.
படம் ரிலீஸ் ஆச்சு. முதல்நாள் எனக்கு பயம்தான். பிரஸ்க்கெல்லாம் போட்டுக்காட்டினேன். ’இந்தப் படம் எப்படி இருக்கும்’ என்று யாருக்கும் ஜட்ஸ்மெண்ட் இல்லை. முதல்நாள் பயந்தேன். ரெண்டாவது நாள். மூன்றாவது நாள். எங்கே பார்த்தாலும், தமிழகம் முழுவதும் பாரதிராஜா, பாரதிராஜா, பாரதிராஜா. கடவுளுக்கு நன்றி. முதல் படத்திலேயே நான் இப்படியொரு அழுத்தமான கிராமத்தைச் சொல்லி வெற்றி பெற்றேன் என்றால், அது இந்த மக்களின் வெற்றி. மக்களின் ரசனைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
கமர்ஷியலாக நிறைய படம் பார்த்திருப்பார்கள். இது கமர்ஷியல் படமல்ல. பாடல்களையெல்லாம் எடுத்துவிட்டுப் பார்த்தால், படம் வேறுமாதிரி இருக்கும். இன்றைக்கு சொல்கிறார்கள். இந்த ரசனைக்கும், இந்த மக்களுக்கும் கடமைப்பட்டவன் இந்த பாரதிராஜா... ‘16 வயதினிலே’ படத்தை ஏற்றுக்கொண்டதற்காக!
ஒரு படத்தின் வெற்றிக்குக் காரணம்... அதை எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம் என்பதுதான். அன்றைக்கு இருந்த மதி ஒளி சண்முகம், டைமண்ட் பாபுவின் அப்பா பிலிம்நியூஸ் ஆனந்தன், ஏழெட்டு பத்திரிகையாளர்கள். விகடனில் வந்த விமர்சனம், அப்போது உன்னிப்பாகக் கவனிக்கப்படும். பத்திரிகைகளே இந்தப் படத்தைக் கொண்டுபோய் சேர்த்தது. புகழாத பத்திரிகைகளே இல்லை. என்னை உயரத்துக்குக் கொண்டு சென்று வைத்தது பத்திரிகைகள்தான். குறிப்பாக, விகடனில் அறுபத்திரெண்டரை மார்க் போட்டிருந்தார்கள். இந்த 40 வருடத்தில் வேறு எந்தப் படமும் இந்த மார்க்கை க்ராஸ் செய்யவில்லை.
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT