Published : 22 Sep 2020 07:05 PM
Last Updated : 22 Sep 2020 07:05 PM
மீடூ புகார் தொடர்பாக அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் ஹியூமா குரேஷி.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும், பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 19-ம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாயல் கோஷ் கூறியுள்ள புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
அனுராக் காஷ்யப்பின் முன்னாள் மனைவிகள், நடிகை டாப்ஸி உள்ளிட்ட பலரும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஹியூமா குரேஷியும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹியூமா குரேஷி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
"அனுராக்கும் நானும் கடைசியாக 2012-13 ஆம் வருடம் பணியாற்றினோம். அவர் ஒரு நல்ல நண்பர். அற்புதமான திறமை கொண்ட இயக்குநர். தனிப்பட்ட முறையில் என்னிடமோ, நான் கேள்விப்பட்ட விதத்திலோ அவர் தவறாக நடந்து கொண்டதில்லை. ஆனால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகச் சொல்பவர்கள் காவல்துறை, நீதித்துறை என உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்.
இதுவரை நான் பேசாமல் இருந்ததற்குக் காரணம் எனக்கு சமூக ஊடகத்தில் நடக்கும் சண்டையிலோ, ஊடகங்களின் விசாரணையிலோ நம்பிக்கையில்லை. இந்தப் பிரச்சினையில் என்னை இழுத்துவிட்டதற்கு நான் கடும் கோபத்தில் இருக்கிறேன். மேலும், ஒரு பெண்ணின் இவ்வளவு வருட கடின உழைப்பும், போராட்டமும், ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டால் சிறுமைப்படுத்தப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களிலிருந்து தள்ளியிருப்போம்.
மீடூ இயக்கத்தின் புனிதத்தைக் காப்பது, ஆண் மற்றும் பெண் என இரண்டு தரப்பின் கூட்டுப் பொறுப்பாகும். இதுதான் எனது இறுதி பதில். இதுபற்றி கருத்துக் கேட்க இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்".
இவ்வாறு ஹியூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
தமிழில் ரஜினி நடித்த 'காலா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் ஹியூமா குரேஷி. தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT