Published : 17 Sep 2020 10:00 PM
Last Updated : 17 Sep 2020 10:00 PM
நீங்கள் எதைச் செய்தாலும் நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள் என்று கங்கணா ரணாவத் பேச்சுக்கு திவ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது. அவருடைய மரணத்தை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. அந்த விசாரணை தற்போது போதை மருந்து பின்னணியில் நடைபெற்று வருகிறது. இந்த மரணம் தொடர்பாக கங்கணா ரணாவத் அளிக்கும் பேட்டிகள், வெளியிடும் ட்வீட்கள் என தொடர்ச்சியாகச் சர்ச்சையாகி வருகிறது.
கங்கணாவின் பேச்சுக்கு தற்போது எதிர்ப்புக் குரல் எழத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நடிகை திவ்யா ஸ்பந்தனா ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"கங்கணா, போதை மருந்து பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், போதை மருந்துக்கு எதிரான போராளியாக மாறுங்கள்.
ஒரு வீடியோவில் நீங்கள் போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகச் சொல்லியிருந்தீர்கள். நீங்கள் தைரியம் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, எப்படி அதிலிருந்து மீண்டீர்கள் என்பது பற்றி, ஏன் போதை மருந்துகள் தவறு என்பதைப் பற்றிப் பேசுங்கள். சஞ்ஜய் தத் அதைச் செய்துள்ளார்.
நிஜமாகவே ஒரு மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்றால் உங்கள் சக நடிகை தீபிகா படுகோனைப் போல் இருங்கள். அவர் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மன அழுத்தம் குறித்த அவரது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உதவும் ஒரு அறக்கட்டளையை நிறுவியுள்ளார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பேசி வரும் விதத்தைப் பார்க்கும் போது உங்கள் நோக்கம் தவறாக இருப்பதாகத் தெரிகிறது. பெயரைச் சொல்லி வெளிப்படுத்துவேன் என்று மிரட்டுவதை விட இரக்கம் காட்டுங்கள், அவர்களுக்கு ஆலோசனை கொடுங்கள்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு மறுவாழ்வு மையத்தை ஆரம்பியுங்கள். போதை மருந்து பழக்கம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையின் அழகும், இன்பமும் தெரிவதில்லை. நீங்கள் ஒரு ஆன்மிகவாதி. உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.
அவர்களை வெளிப்படுத்துவதே சிறந்தது என்று நினைத்தால், அதைச் செய்யுங்கள். காவல்துறையிடம் செல்லுங்கள். அவர்களிடம் ஆதாரத்தைக் கொடுங்கள். அவர்களின் வேலையை அவர்கள் செய்யட்டும்.
இந்த தீய செயல்களைத் தடுக்க போதை மருந்து தடுப்புப் பிரிவினருக்கு அது பெரிதும் உதவும். நீங்கள் எதைச் செய்தாலும் நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள். வஞ்சத்தோடு அல்ல. கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் நம்மிடமிருந்து தான் துவங்க வேண்டும்"
இவ்வாறு திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT