Published : 17 Sep 2020 02:05 PM
Last Updated : 17 Sep 2020 02:05 PM

தலைவர் ஆடியோவைக் கேட்ட சிறிது நேரத்தில் கரோனா நெகட்டிவ்; நிச்சயம் சந்திப்பேன்: ரஜினி ரசிகர் முரளி உற்சாகம்

மும்பை

தலைவர் பேசியதைக் கேட்ட சிறிது நேரத்தில் கரோனா நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவில் உறுதியானதாகவும், உடல்நலம் சரியாகி கண்டிப்பாக தலைவரைச் சந்திப்பேன் என்றும் ரஜினி ரசிகர் முரளி உற்சாகத்துடன் தெரிவித்தார்.

நேற்று (செப்டம்பர் 16) முதல் ரஜினி ரசிகர் முரளியின் ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. முரளிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமயத்தில் அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, தனது ட்விட்டர் பதிவில், "தலைவா.என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதைப் பலரும் ஷேர் செய்து, அவர் பூரண நலம்பெற பிரார்த்தித்து வருகிறார்கள்.

ரசிகர் முரளி குறித்த செய்தியை ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் எடுத்துக் கூறினர். உடனடியாக முரளிக்கு ரஜினி ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க" என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த ஆடியோவும் வைரலாகி வருகிறது. இந்தச் சமயத்தில் ரஜினி ரசிகர் முரளியிடம் பேசிய போது அவர் கூறியதாவது:

"எனது பெயர் முரளி. மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். மனைவியின் பெயர் ப்ரியா, தர்ஷன் மற்றும் தருண் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்த என் பெற்றோர் இரண்டு மாதத்துக்கு முன்பு தான் காலமானார்கள். இதில் அப்பா கரோனா தொற்று பாதிப்பால் மறைந்தார்.

எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து நான் ரஜினி ரசிகன்தான். தலைவர் ரஜினி படங்கள் வெளியான தினத்தன்று சென்னையில் இருப்பேன். அங்குதான் கொண்டாட்டம் களைகட்டும். இப்போதுவரை ஒரு படத்தையும் முதல் நாள் தவறவிட்டதில்லை.

சில நாட்களுக்கு முன்பு எனக்குக் கரோனா அறிகுறி தெரிந்தது. உடனடியாகப் பரிசோதித்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது நடந்த பரிசோதனையில் எனக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடல்நிலையும் மிகவும் மோசமானது.

இனிமேல் பிழைக்கவே மாட்டோம் என்று நினைத்துதான் தலைவர் ரஜினிக்காக அந்த ட்வீட்டை வெளியிட்டேன். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி தலைவர் காதுக்குச் சென்று உடனடியாக எனக்காக ஆடியோ வெளியிட்டுள்ளார். அவருடைய ஆடியோவைக் கேட்ட சிறிது நேரத்தில் எனது அடுத்த கரோனா தொற்று ரிசல்ட் வந்தது. அது நெகட்டிவ்.

தலைவர் ஆடியோ கேட்டவுடனே என்னை நான் மறந்துவிட்டேன். அதுவொரு பாசிட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கியது. கடவுளுக்கு முன்பு அமர்ந்து தியானம் பண்ணும்போது ஒரு பாசிட்டிவ் ஆன எண்ணம் வரும் அல்லவா, அப்படி இருந்தது. தன்னிலை மறந்துவிட்டேன்.

தலைவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. ஆடியோ வெளியிட்டு, வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். கண்டிப்பாகப் போவேன் சார்".

இவ்வாறு உற்சாகமாகப் பேசினார் முரளி.

ரஜினி ஆடியோ குறித்து முரளி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"தலைவர் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் கிடைத்தது. அதிசயம் நடந்தது, அற்புதம் நிகழ்ந்தது. கரோனா நெகட்டிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி".

இவ்வாறு முரளி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x