Published : 15 Sep 2020 09:54 PM
Last Updated : 15 Sep 2020 09:54 PM
படங்கள் வெளியீடு தொடர்பாக பாரதிராஜா அளித்துள்ள பேட்டிக்கு, திரையரங்க உரிமையாளர்கள் எதிர்வினையாற்றி உள்ளனர்.
சென்னையில் நேற்று (செப்டம்பர் 14) தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழா முடிந்தவுடன் சங்கத் தலைவர் பாரதிராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது திரையரங்கு உரிமையாளர்களுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதில், "தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத் தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். வாங்குகிறவர்கள், வாங்குவார்கள் இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்.
திரையரங்குகளைக் கல்யாண மண்டபம் ஆக்கிக் கொள்ளுங்கள், மாநாடு நடத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இடம். எங்களுடைய படங்கள் திரையிடும்போதுதான், அந்தக் கட்டிடம் பெருமை அடைகிறது. எங்களுடைய படங்களைப் பார்க்கத்தான் ரசிகர்கள் உள்ளே வருகிறார்கள்" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் பேச்சுக்குத் திரையரங்க உரிமையாளர்கள் சிலர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அவற்றின் தொகுப்பு இதோ:
ராம் திரையரங்கம்:
உங்கள் பொருட்களுக்கு நீங்கள் நிபந்தனை விதிப்பது போல எங்களுக்கும் உரிமை உள்ளது. ஏனென்றால் நாங்கள்தான் உங்கள் பொருளை விற்கிறோம். எல்லாத் திரைப்படங்களையும் ஓடிடியில் வெளியிட்டு விடுங்களேன். வெற்றி திரையரங்கு உரிமையாளர் சொன்னது போல, திரையரங்குகள் போன்ற பெரிய இடங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். எனவே, உங்களுக்கு என் வாழ்த்துகள்.
தயாரிப்பாளர்களின் நிலை எங்களுக்குப் புரிகிறது. ஆனால், தொற்று சமயத்தில் நாங்கள் திரையரங்கைத் திறந்தால் வழக்கத்தை விட அதிகமான நஷ்டமே எங்களுக்குக் கிடைக்கும். ஆனால், இந்த நிலை மாறும் என்று நம்புகிறோம். நாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நஷ்டத்தை விட, அதிக நஷ்டத்தை, தயாரிப்பாளர் சங்கம் சொல்லும் விஷயங்களால் ஏற்படும்.
விபிஎப் கட்டணங்கள், டிக்கெட் கட்டணத்தில் பங்கு, லாப சதவீதம் குறைவு என்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் வியாபாரம் செய்கிறோம். சேவை செய்யவில்லை. மக்களின் பொழுதுபோக்கில் இவ்வளவு வருடங்கள் திரையரங்குகளுக்கு முக்கிய இடம் இருந்தது. தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்கள், மற்ற மொழி ரசிகர்களை வைத்து அதை எங்களால் தொடர முடியும்.
வெற்றி திரையரங்கம்:
திரைப்படம் என்பது தயாரிப்பாளரின் பொருள் என்றால், திரையரங்கம் என்பது எங்கள் பொருள். எனவே இந்த நிபந்தனைகளைப் பற்றி என்றுமே பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம். இதே விஷயம் ஓடிடிக்கும் பொருந்தும்.
எனவே ஒரு தரப்பு மட்டுமே நிபந்தனைகள் போட்டுக் கட்டாயப்படுத்தும் என்பதை அனுமதிக்க முடியாது. ஓடிடி நல்ல விலை தருகிறார்கள் என்றால் ஏன் இன்னும் காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாமே.
ஓடிடி தான் எதிர்காலம் என்ற தெளிவற்ற பார்வை இருந்துவிட்டுப் போகட்டும். திரையரங்குகளின் முடிவாக இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தின் ரியல் எஸ்டேட் மதிப்பை வைத்துப் பார்த்தால், இங்கு இரு திரையரங்கின் சொத்து மதிப்பு அதிகம். எந்த மாதிரியான வியாபாரத்துக்காகவும் மாற்றிக் கொள்ளும் திறன் இந்த பெரிய சொத்துக்கு உள்ளது. கடைசியில், எங்களுக்கு இழக்க எதுவுமில்லை.
இவ்வாறு ராம், வெற்றி திரையரங்குகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment