Published : 15 Sep 2020 09:08 PM
Last Updated : 15 Sep 2020 09:08 PM
'ரங்கீலா' படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 'ரங்கீலா' படத்தின் பாடல்களைத் தான் பரிசோதனை முயற்சியாகச் செய்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் ஊர்மிளா, ஆமிர் கான், ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் வெளியான படம் 'ரங்கீலா'. முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக இசையமைத்த இந்தித் திரைப்படம் இதுவே. பாடல்களும், திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றன. இன்று வரை இந்தி சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை 'ரங்கீலா' பெற்றுள்ளது.
'ரங்கீலா' பற்றி சமீபத்தில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"புதிதாக ஒன்றைக் கண்டுபிடிப்பதுபோல இருந்தது 'ரங்கீலா' பாடல்களுக்கு இசையமைத்தது. பாடல்கள் மிக இயல்பாகவே வந்தன. எந்தவிதமான அழுத்தத்தையும் நான் உணரவில்லை. ஏனென்றால் ராம் கோபால் வர்மா, பாடலாசிரியர் மெஹ்பூப் ஆகியோரின் புதிய நட்பை நான் மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் விளையாட்டாகப் பேசி, மகிழ்ச்சியாக இருப்போம். அதுதான் எனக்குப் பிடித்தமான சூழல்.
நாங்கள் மெட்டமைத்த முதல் பாடல் 'தன்ஹா தன்ஹா', அதன்பின் 'ரங்கீலா ரே' பாடல் போட்டோம். இதில் 'ரங்கீலா ரே' பாடலை ஆஷா போன்ஸ்லேவைப் பாட வைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்தது மிக முக்கியமான முடிவு. ஏனென்றால் அவர் பங்களிப்பு அந்தப் பாடலுக்கு அதி அற்புதமாக ஏதோ ஒன்றைச் செய்தது. நாங்கள் அனைவருமே புதியவர்கள் என்பதால் அவரால் இந்தப் பாடல்களுக்கு மதிப்பு கூடியது.
பின்னணி இசையின்போது ஆமிர் கானின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோனேன். ஊர்மிளாவும் அற்புதமாக நடித்திருந்தார். ஏற்கெனவே ஜாக்கி ஷெராஃபின் 'ஹீரோ' படத்தைப் பார்த்திருந்ததால் நான் அவரது ரசிகனாகியிருந்தேன்.
'ரங்கீலா'வின் ஒட்டுமொத்தப் பாடல்களுமே ஒரு சோதனை முயற்சி என நினைக்கிறேன். ஒரு ஆரம்பப் பாடலுக்கு யாருமே பைரவி ராகத்தைப் பயன்படுத்த மாட்டார்கள். வழக்கமாகக் கடைசிப் பாடலுக்குத்தான் பயன்படுத்துவார்களாம். அப்போது எனக்கு இது தெரியாது. 'தன்ஹா தன்ஹா'வில் பைரவி ராகத்தின் சாயல் இருக்கும். சந்தோஷமாக மெட்டமைத்தேன். 'ரங்கீலா ரே' பாடல் 50-களில் வந்த, அந்தக் கால மெலடிப் பாடலைப் போல.
இது சரியென்று தெரிகிறது, இதுதான் சரியாக இருக்கும் என்கிற ரீதியில்தான் நாங்கள் முடிவெடுத்தோம். 'மங்க்தா ஹாய் க்யா' பாடல் பலரை ஆச்சரியப்பட வைத்தது. ஏனென்றால் அந்தப் பாடல் எப்படிப் போகும் என்பது யாருக்கும் புரியவில்லை. சரணம், பல்லவி என்கிற அமைப்பில் இருக்காது. இந்தப் பாடல் பிரபலமாகாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால், படமாக்கப்பட்டபின் அனைவருக்கும் பிடித்தது. ராமு அதைப் படமாக்கிய விதம் நன்றாக இருந்தது.
இன்றும் இந்தப் பாடல்கள் பற்றிப் பலர் பேசுவது எனக்கு நெகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியென்றால் இது பலரிடம் பரவியிருக்கிறது. அதுதான் இசைக்குத் தேவையான அங்கீகாரம். நம் அனைவரின் பணியில் நமக்குத் தேவையான அங்கீகாரம். வித்தியாசமாக ஒன்றை முயன்று, அது அங்கீகரிக்கப்படுகிறது எனும்போது நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். எனவே நான் என்றும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்".
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment