Published : 14 Sep 2020 01:34 PM
Last Updated : 14 Sep 2020 01:34 PM
’ஒரு படம் இத்தனை ரூபாய்க்கு பிஸ்னஸ் ஆகும்’ என்று ஒரு கணக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும். ஆனால் அப்படி கணக்குப் போட்டிருந்ததையெல்லாம் கடந்து, பிரமாண்டமான விலைக்கு பட விநியோகம் விலைபோயிருந்தது. 84ம் ஆண்டில், அதுதான் அப்போதைய மிக முக்கியமான டாபிக்காக, திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒருவரே. அவர்... கே.பாக்யராஜ். அந்தப் படம்... ‘தாவணிக்கனவுகள்’.
அண்ணன் - தங்கை என்று கதை இருந்தாலே அதில் ஓவர் செண்டிமெண்ட் தூவி, ஐந்தாறு முறையேனும் அழ வைத்துவிடுவார்கள் ரசிகர்களை. ஆனால் அண்ணன் - தங்கைகள் என்ற விஷயத்தை வைத்துக்கொண்டு, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, திறமை, வாழ்க்கையில் முன்னேறுதல், வரதட்சணை முதலான அத்தனை விஷயங்களையும் உள்ளடக்கி வந்ததுதான் ‘தாவணிக்கனவுகள்’.
பட்டதாரி இளைஞன். அவருக்கு ஐந்து தங்கைகள். விதவைத் தாயார். அந்த இளைஞனுக்கு மாமன் மகள். பணக்கார மாமன் மகள். வேலையில்லாமல் தங்கைகளுடனும் அம்மாவுடனும் இருப்பவருக்கு அந்த வீட்டின் உரிமையாளர்தான் ஆதரவு. அவர் ஓய்வு பெற்ற மிலிட்டிரிக்காரர். சைக்கிள் கடை வைத்திருப்பவர்.
வேலை கிடைத்தபாடில்லை. மாமன் மகளோ விரும்புகிறாள். வீட்டையெல்லாம் விட்டுவிட்டு வந்தால், நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்; வேலை வாங்கித் தருகிறேன் என்கிறார் மாமா. ஆனால் அதைப் புறக்கணித்துவிடுகிறார் சுப்ரமணி. அதுதான் நாயகனின் பெயர்.
இதனிடையே ’பட்டணம் போ, வேலை கிடைக்கும்’ என்று அனுப்பி வைக்கிறார் மிலிட்டிக்காரர். அங்கே போய், குறுகிய காலத்தில் முன்னேறுவதற்கான வழிகளையும் குறுக்கு வழிகளையும் கையாளுகிறார். எல்லாமே தோல்வியில் முடிகிறது. கடைசியில், சினிமாவில் துணை நடிகராக வேலை கிடைக்கிறது. அங்கே, இயக்குநர் பாரதிராஜாவின் கண்களில் இவர் பட, இவரின் வசனத்தை அறிந்து கொள்ள, டயலாக் மாடுலேஷனைப் பார்த்து வியந்து, தன்னுடைய படத்தில் நாயகனாக்குகிறார். மிகப்பெரிய ஹீரோவாகிறார் சுப்ரமணி.
லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார். தங்கைகளுக்கு, டாக்டர், எஞ்சினியர், வக்கீல் என்று மாப்பிள்ளை பார்த்து, திருமணம் நடத்த, தடக்கென்று இவர்களை திருமணம் செய்ய முடியாது என்று தங்கைகள் சொல்ல... அதிர்ந்து போகிறார். ஒரு சின்ன க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுடன் கதையை முடிக்க...கலகலவென சோகங்களையும் சமூக அவலத்தையும் சொன்ன நல்ல படம் பார்த்த திருப்தியுடன் வந்தார்கள் ரசிகர்கள்.
ஐந்து தங்கைகளுக்கு அண்ணனாக பாக்யராஜ். மாமன் மகளாக இளவரசி. சென்னையில் துணைநடிகையாக ராதிகா. மிலிட்டிரிக்காரராக சிவாஜி கணேசன். இண்டர்வியூ காட்சி என்பது பாக்யராஜுக்கு, ‘மெளன கீதங்கள்’ படத்தில் இருந்தே அல்வா சாப்பிடுவது மாதிரி. இதிலும் அப்படியான அட்டகாச காட்சிகள் உண்டு. வாய் பேச முடியாதவருக்கு தங்கையை திருமணம் செய்துவைக்க அம்மா முயலுவதைக் கண்டு பொருமுவது, அம்மாவையும் தங்கைகளையும் விடச் சொல்லி மாமா கேட்பது, குடும்ப சகிதமாக நண்பனின் திருமணத்துக்குச் சென்று அவமானப்படுவது, ‘கஷ்டப்படுறவங்கதான் நாங்க. ஆனா சோத்துக்காக வரல. இங்கே சாப்பிட்டா என்ன செலவாகுமோ, அதை விட அதிகமாத்தான் பிரசெண்ட் வாங்கிட்டு வந்திருக்கோம்’ என்று சொல்லி கெத்தாக வெளியேறுவது என்று காட்சிக்குக் காட்சி கைதட்டல்கள் வாங்கிக் கொண்டே இருப்பார் பாக்யராஜ்.
படத்துக்கு தங்கைகளை அழைத்துச் செல்வது, ‘ஒருமாதிரி’யான காட்சி வரும் போது, 'அஞ்சு பைசா கீழே விழுந்துருச்சு. தேடுங்க' என்று குனியச் சொல்லி தேடவைப்பது, ஒருகட்டத்தில் கிளுகிளு காட்சியில் தன்னையே மறப்பது, ‘அண்ணே, அஞ்சு பைசா போட மறந்துட்டியே’ என்று கடைசி தங்கை சொல்வது என படம் நெடுகவே பாக்யராஜ் ‘டச்’கள் ஏராளம். டெய்லரிடம் அங்குசம் திருடுவது, அயர்ன் செய்பவரிடம் நூறுரூபாய்க்கு சில்லறை இருக்கா என்று கேட்டு டபாய்ப்பது என்றெல்லாம் தனக்கே உரிய பாணியில் திரைக்கதைக்குள் காமெடியையும் சென்டிமென்ட்டையும் நுழைத்திருப்பார்.
சிவாஜியும் பாக்யராஜும் முட்டிக்கொள்ளும் காட்சியெல்லாம் தனிச்சுவை. ஒருகட்டத்தில் சென்னைக்கு சென்ற பாக்யராஜின் பெயரை வைத்து, அந்தக் குடும்பத்துக்கு பணம் அனுப்புவதும் உதவுவதும் என நெகிழவைத்திருப்பார் சிவாஜி. கோர்ட்டை அவமதித்து பணம் கட்டுவது, குழாயடி தகராறு, பூசாரியிடம் தேசியக் கொடியை விளக்குவது, இறப்பதற்கு முன்பே சமாதி கட்டுவது, வீட்டை பாக்யராஜ் குடும்பத்துக்கு எழுதி வைப்பது, உடல்நலமின்றி மரணத்துக்குப் போராடிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜின் தங்கையிடம் ‘நேதாஜி படம் எடுத்துட்டு வா. அவரைப் பாத்துக்கிட்டே வீரமா சாகணும்’ என்று சொல்வது என படத்தில் தனக்கே உண்டான பாணியில், தன் நடிப்பை வழங்கியிருப்பார். மிலிட்டிரிக்காரராகவே வாழ்ந்திருப்பார்.
அங்கே... நேதாஜி படத்துக்கு பதிலாக கண்ணாடியைத் தருவார் தங்கை நித்யா. சிவாஜி குழம்புவார். ‘எங்களுக்கு நீங்கதான் கேப்டன் நேதாஜி’ என்பார். சிவாஜி கண்ணாடியைப் பார்ப்பார். அவரின் உருவம் அப்படியே நேதாஜியாக மாறும். சிவாஜி கண்ணாடியில் உள்ள நேதாஜி (அதுவும் சிவாஜி)க்கு சல்யூட் வைப்பார். இறந்துவிடுவார். அதிர்ந்து போகிற நேதாஜி பிம்பம், வருத்தத்துடன் சல்யூட் வைக்கும். பாக்யராஜின் டைரக்ஷன் டச். 'இமயத்துடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறோம்’ என்று சிவாஜியுடன் இணைந்ததைப் பெருமையுடன் டைட்டிலில் அறிவித்து மகிழ்ந்திருப்பார் பாக்யராஜ்.
போஸ்ட்மேனாக நடித்திருப்பார் பார்த்திபன். அநேகமாக சின்னச் சின்ன வேடங்களில் வந்திருந்தாலும் அவர் முகத்தை அடையாளம் காட்டியது இந்தப் படம்தான். முதல் படமே சிவாஜி காம்பினேஷன். ராதிகாவின் நடிப்பும் குறும்பும் பொறுப்புமாக அமர்க்களமாக இருக்கும்.
படத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாரதிராஜாவாகவே வருவார். ஷூட் பண்ணுவார். ஆக, பாரதிராஜாவை இயக்குநராக நடிக்க வைத்து இயக்கியிருப்பார் பாக்யராஜ். குருவுக்கு செய்த எளிய காணிக்கை. படத்துக்குள் படமாக வரும் காட்சியில் ஊர்வசியும் நடித்திருப்பார். இன்னொரு படப்பிடிப்புக் காட்சியிலும் பாடல் காட்சியிலும் ராதா நடித்திருப்பார்.
83ம் ஆண்டு ’முந்தானை முடிச்சு’ வந்தது. மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ‘தாவணிக் கனவுகள்’ படத்துக்கு பூஜை போட்டார் பாக்யராஜ். அந்தநாளிலேயே, அத்தனை ஏரியாவும் விற்றது. ஒவ்வொருவரும் அவர்களாகவே விலையை போட்டிபோட்டுக்கொண்டு ஏற்றினார்கள். கோடிகளை தாண்டி பிஸ்னஸ் ஆனது.
படத்துக்கு இளையராஜாதான் இசை. எல்லாப் பாடல்களும் ஹிட். ‘அப்பனுக்கும் ரெண்டு பொண்டாட்டி’, ’வானம் நிறம் மாறும்’, ’செங்கமலம் சிரிக்குது’, ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ என்று எல்லாப் பாடல்களுமே வெற்றி பெற்றன.
தங்கைகள், தங்கைகளுக்கு கல்யாணம், வேலையில்லாப் பிரச்சினை, வரதட்சணைப் பிரச்சினை, சினிமாவில் நடித்து முன்னுக்கு வருவது என்றெல்லாம் கதையும் திரைக்கதையும் பல பிரச்சினைகளை இந்த ஒரே படத்தில் சேர்த்துக் கோர்த்தது உள்ளிட்ட சில காரணங்களால், படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது.
1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி வெளியானது ‘தாவணிக்கனவுகள்’. படம் வெளியாகி, 36 ஆண்டுகளாகின்றன. பாக்யராஜ் வசனம் பேச, பாரதிராஜா அதைப் பார்த்து வியக்கும் காட்சியையும் அஞ்சு பைசாவை கீழே போட்டுவிட்டு கிளுகிளு காட்சியை தங்கைகள் பார்க்காமல் இருக்கச் செய்கிற காட்சியையும் போஸ்ட்மேன் பார்த்திபனையும் மிலிட்டிரிக்காரரையும் இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்.
படத்தின் கேப்டன் பாக்யராஜுக்கும், ‘தாவணிக்கனவுகள்’ டீமிற்கும் வாழ்த்துகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT