Published : 14 Sep 2020 12:41 PM
Last Updated : 14 Sep 2020 12:41 PM
திரையரங்க உரிமையாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா பேட்டியளித்துள்ளார்.
தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, பைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே இந்தப் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது திரையரங்க உரிமையாளர்கள் உடனான சர்ச்சை தொடர்பாக பாரதிராஜா பேசியதாவது:
"திரையரங்க உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றால் என்ன பண்ண முடியும். படங்கள் திரைக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் பண்ணும்போது, வேறு வழிகள் இருக்கின்றன. தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். வாங்குகிறவர்கள் வாங்குவார்கள். இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்.
திரையரங்குகளைக் கல்யாண மண்டபம் ஆக்கிக் கொள்ளுங்கள், மாநாடு நடத்திக் கொள்ளுங்கள். அது உங்களுடைய இடம். எங்களுடைய படங்கள் திரையிடும்போதுதான், அந்தக் கட்டிடம் பெருமை அடைகிறது. எங்களுடைய படங்களைப் பார்க்கத்தான் ரசிகர்கள் உள்ளே வருகிறார்கள். எங்களுடைய படங்களால்தான் வியாபாரம் நடக்கிறது. எங்களுடைய படங்கள் இல்லையென்றால் அது உங்களுடைய கட்டிடம். என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
எங்களுடைய கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். பிடிக்கும், பிடிக்கவில்லை என்பது அவர்களுடைய அபிப்ராயம். எங்களுடைய கோரிக்கைகளை ஒப்புக்கொண்டால் இன்னொரு வழிக்குப் போக மாட்டோம். விஞ்ஞான வளர்ச்சியில் சினிமாவுக்கு இன்னொரு வழிகூட பிறக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் சின்ன சின்னப் பிரச்சினைகள் வரும், அதைத்தாண்டிப்போவது தான். இன்றைக்கு ஓடிடி வந்துள்ளது. நாளைக்கு இன்னொரு வழி வரலாம். இப்போதுள்ள லாபத்தை விட அதிக லாபம் என்றால், நாங்கள் அங்குதான் செல்வோம். வியாபாரம் என்பது கணிசமான லாபத்துக்குப் பண்ணுவதுதான். நஷ்டத்திலா பண்ண முடியும்.
நாங்கள் நடிகர்களுக்கு 10 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பது என்பது வேறு. அது அவர்களுக்குத் தேவையில்லாத விஷயம். தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தைக் குறைக்க வேண்டும், அதைக் குறைக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார். ஒரு படம் தயாரிக்க என்ன தேவை, என்ன பொருட்செலவு என்று திட்டமிடுகிறோம். அங்கு வந்து அவர்கள் கணக்குப் போடத் தேவையில்லை. குறிப்பிட்ட சிலர் 40, 50 திரையரங்குகளைக் கையில் வைத்துள்ளீர்கள். பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் மட்டுமே வாங்குகிறீர்கள். 100-க்கும் மேற்பட்ட சின்ன படங்கள் உள்ளன. அவற்றைத் திரையிடுங்களேன்? ஏன் திரையிட மாட்டேன் என்று சொல்கிறீர்கள்?
கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன், தயாராக உள்ள சின்ன படங்களைக் கொடுக்கிறோம். அதை திரையிட தைரியம் இருக்கிறதா? விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்களைக் கேட்கக் கூடாது".
இவ்வாறு பாரதிராஜா பேசியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT