Published : 11 Sep 2020 09:35 PM
Last Updated : 11 Sep 2020 09:35 PM
பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் சாஜித் கான் மீது புதிதாக பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. விளம்பர மாடல் ஒருவர் சாஜித் கான் தன்னை தவறாகத் தொட முயன்றதாகவும், தன் முன் ஆடைகளை நீக்கச் சொன்னதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று, #ArrestSajidKhan (சாஜித் கானை கைது செய்) என்கிற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. டிம்பிள் பால் என்பவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன.
"மீடூ இயக்கம் தொடங்கிய போது பல சாஜித் கான் குறித்துப் பேசினார்கள். ஆனால் எனக்கு அப்போது தைரியம் வரவில்லை. ஏனென்றால், பின்புலம் இல்லாத எந்த ஒரு நடிகரையும் போலத்தான் நானும் இருந்தேன். என் குடும்பத்துக்காக நான் உழைக்க வேண்டியிருந்தது. எனவே நான் அமைதி காத்தேன். இப்போது என்னுடன் என் பெற்றோர் இல்லை. எனக்காக நான் சம்பாதிக்கிறேன். எனவே என் 17-வது வயதில் சாஜித் கான் என்னைத் தவறாக நடத்தினார் என்பதை என்னால் இப்போது தைரியமாகச் சொல்ல முடியும்" என்று டிம்பிள் பகிர்ந்துள்ளார்.
ஒரு நடிகர் தேர்வின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக டிம்பிள் கூறியுள்ளார். "அவர் என்னிடம் அசிங்கமாகப் பேசினார். என்னைத் தொட முயற்சித்தார். அடுத்த அவர் எடுக்கப்போகும் 'ஹவுஸ்ஃபுல்' திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அவர் முன் ஆடைகளை நீக்கச் சொன்னார். அவர் இன்னும் எத்தனை பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார் என்பது கடவுளுக்கே தெரியும்.
இப்போது நான் இதை வெளியே சொல்வது அனுதாபத்தைத் தேட அல்ல. அது என் இளம் வயதில் என்னை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை நான் இப்போது உணர்ந்திருக்கிறேன். ஆனால் இப்போது பேச வேண்டிய நேரமில்லையா? இது போன்ற ஆட்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்க வேண்டும். நடிகர் தேர்வில் இப்படி நடப்பதால் மட்டுமல்ல, நமது கனவுகளைச் சுரண்டி நம்மிடமிருந்து திருடுவதாலும். ஆனால் நான் நின்றுவிடவில்லை. அதே நேரம் நான் செய்த தவறு, இது பற்றி பேசாமல் இருந்தது தான்" என்று டிம்பிள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பகிரும்போது, "ஜனநாயகம் இறந்து, பேச்சு சுதந்திரம் இல்லாத நிலை வருவதற்குள் இதை நான் பேச வேண்டும் என்று நினைத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டிம்பிளின் இந்தப் பகிர்வைத் தொடர்ந்து ஏன் இன்னும் சாஜித் கானை கைது செய்யவில்லை என்று பல நெட்டிசன்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த 2018-ம் ஆண்டு மீடூ இயக்கம் இந்தியாவில் ஆரம்பித்த சமயத்திலேயே சாஜித் கான் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதில் சோனாலி சோப்ரா, ரேஷல் வைட் உள்ளிட்ட இரண்டு நடிகைகளும், ஒரு பத்திரிகையாளரும் அடக்கம்.
இதற்கு அப்போது பதில் கூறியிருந்த சாஜித் கான், "என் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாலும், என் குடும்பத்தின் மீது, என் தயாரிப்பாளர் மீது, என் 'ஹவுஸ்ஃபுல் 4' திரைப்படத்தின் நடிகர்கள் மீது தரப்படும் அழுத்தத்தாலும், நான் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு உண்மையை நிரூபிக்கும் வரை எனது இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன். உண்மை வரும் வரை யாரும் தீர்ப்பு வழங்க வேண்டாம் என ஊடகத்தில் இருக்கும் என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ட்வீட் செய்திருட்ன்ஹார்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சாஜித் கான் அமைதி காத்து வருகிறார். இந்த புதிய குற்றச்சாட்டு குறித்தும் சாஜித் கான் இதுவரை பதிலளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT