Published : 11 Sep 2020 04:55 PM
Last Updated : 11 Sep 2020 04:55 PM
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்குக் குரல் கொடுக்க, நடிகர் ஆயுஷ்மான் குரானாவை யுனிசெஃப் அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது
ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமை என்கிற பிரச்சாரத்தை ஆயுஷ்மான் விளம்பரப்படுத்துவார். ஒரு பாதுகாப்பான குழந்தைப் பருவம் கிடைக்காத அத்தனை குழந்தைகளுக்காகவும் தான் கவலை கொள்வதாக ஆயுஷ்மான் கூறியுள்ளார்.
"யுனிசெஃப்புடன் இணைந்து, அவர்களின் பிரபல குரலாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோருக்குமே வாழ்க்கையில் சிறப்பான துவக்கம் கிடைக்கத் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். என் வீட்டின் பாதுகாப்பில், மகிழ்ச்சியில் எனது குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கும் போது, அப்படி ஒரு பாதுகாப்பான குழந்தைப் பருவமே கிடைக்காத, வீட்டிலும் வெளியிலும் வன்முறைச் சூழலில் வளரும் குழந்தைகளை நினைத்து நான் கவலைப்படுகிறேன்.
அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் உரிமையைக் காக்க ஆதரவு கொடுப்பதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். அவர்களுக்கான ஆதரவைக் கொடுக்கும் போது, வன்முறை அற்ற சூழலில் அவர்கள் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, கல்வியறிவு பெற்றவர்களாக வளர்வார்கள்." என்று ஆயுஷ்மான் கூறியுள்ளார்.
குழந்தைகள் உரிமைக்கான பிரச்சாரம் செய்யவிருக்கும் பிரபல குரலாக ஆயுஷ்மானை வரவேற்றிருக்கும் இந்தியாவின் யுனிசெஃப் பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக், "யுனிசெஃப்பின் பிரபல பிரச்சாரக் குரலாக ஆயுஷ்மான் குரானாவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி. அவர் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எல்லைகளுக்கும் சவால் விடுபவர். ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சி மிகுந்த, வலிமை மிகுந்த குரலாக ஆயுஷ்மான் ஒலிப்பார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை அடியோடு ஒழிக்க ஆயுஷ்மான் எங்களுடன் சேர்ந்து ஆதரவு தருகிறார். இந்த முக்கியமான பிரச்சினை குறித்த விழிப்புணர்வை அவரது ஆதரவு அதிகரிக்கும். குறிப்பாக இந்த கோவிட்-19 நெருக்கடி சூழலில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், இதனால் வரும் சமூக நிதி சார் தாக்கத்தாலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக்கான சாத்தியங்கள் அதிகம்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT