Last Updated : 09 Sep, 2020 04:53 PM

1  

Published : 09 Sep 2020 04:53 PM
Last Updated : 09 Sep 2020 04:53 PM

கே.பாலசந்தர், எம்.எஸ்.வி., கண்ணதாசன், வயலின்... எஸ்.பி.பி.யின் ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ - இந்த நிலா பாடலுக்கு 43 வயது


பாடல்களுக்கும் நமக்குமான பந்தம் அதுவொரு அழகான ஸ்நேகிதம். சினிமாவும் பாடல்களும் நமக்குள் என்னவோ செய்கிற தொடர்புகள். அதிலும் குறிப்பாக, பால்யத்துக்கும் பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. படத்தின் பெயர் தெரியாமல் போய்விடும். சில படங்கள் மறந்துவிடும். ஆனால் பாடல்கள் மட்டும், நங்கூரமிட்டு மனதில் அசையாமல் இருந்துவிடும். அப்படி அசையாமல் மனதுக்குள் இருந்து நம்மை அசைத்துப் போடுகிற எத்தனையோ பாடல்கள் உண்டு. அப்படியொரு பாட்டுதான் ‘வான் நிலா நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’ என்ற பாடல்.

1977ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியானது ‘பட்டினப்பிரவேசம்’. விசுவின் கதை வசனத்தில் வந்த படம். கே.பாலசந்தர் இயக்கிய படம். டெல்லிகணேஷ், ஜெய்கணேஷ், சிவசந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, மீரா, சரத்பாபு என பலரும் நடித்த படம்.

கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் குடும்பத்தின் கதைதான் இது. நகரத்து கலாச்சாரத்தை, ‘பாரப்பா பழநியப்பா’ என்று எம்ஜிஆர் பாடினார். ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்று நாகேஷை வைத்து ‘அனுபவி ராஜா அனுபவி’யில் பாடவைத்தார் பாலசந்தர். இப்போது படமாகவே எடுத்திருந்தார்.

இந்தப் படம்தான் டெல்லிகணேஷ் அறிமுகமான முதல் படம். தமிழ் சினிமாவில் நண்பன் என்றாலே, அதிலும் ரஜினிக்கு நண்பன் என்றாலே... ‘கூப்பிடு சரத்பாபுவை’ என்பார்களே... அந்த சரத்பாபு அறிமுகமான படமும் இதுதான். ‘மூன்று முடிச்சு’ படத்திலும் ‘அவர்கள்’ படத்திலும் சின்னச்சின்ன வேடங்கள் கொடுத்து பயன்படுத்திய பாலசந்தர், சிவசந்திரனை இந்தப் படத்தில் முழுவதுமாகப் பயன்படுத்தினார்.

படம், மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், எம்.எஸ்.வி.யின் இசையில், கண்ணதாசனின் வரிகளில், எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில், ‘அடி வாங்கடி சிட்டுக்களா, இங்கே வட்டமிட்டு பாட்டுப்படிப்போம்’ என்ற பாடல், மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இதைவிட முக்கியமான பாடல் உண்டு. எழுபதுகளின் காதலர்களுக்கான இனிய பாடல். காதலர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான பாடல். பாடலை ரசிப்பவர்களுக்கும் வார்த்தைகளில் கரைந்து போகிறவர்களுக்குமான பாடல்.

கண்ணதாசனுக்கு பாட்டெழுவதெல்லாம் சுடச்சுட ஒரு ஃபில்டர் காபி சாப்பிடுவது மாதிரி. காபி சாப்பிடுகிற நேரத்தில், ஒரு பாட்டை எழுதிவிடுவார். அப்படி அவர் எழுதிய பாடல்களை, நாம் காலம் முழுவதும் மன ஃபோல்டரில் வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

‘அத்திக்காய் காய் காய்’ என்று ‘காய் காய்’ என்று எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன்’ என்று எழுதியிருப்பார். ‘பட்டினப்பிரவேசம்’ படத்திலும் அப்படியொரு பாடலை எழுதி அசத்தினார். அந்தப் பாடல்... ‘வான் நிலா நிலா அல்ல... உன் வாலிபம் நிலா’.

எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டு... கவியரசர் கண்ணதாசனின் வரிகள்... எஸ்.பி.பி.யின் தேன் தடவிய குரல்... என மூன்றும் கலந்து முக்கனியாய் தித்தித்த பாடல்... இப்போதும் எப்போதும் தித்திக்கும் பாடல்...

பாடலின் தொடக்கத்தில் வரும் வயலின் நம்மை என்னவோ செய்யும். பாட்டு முழுவதும் வயலினின் ராஜாங்கம்தான். ‘நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா’ என்று எழுதினார் கவிஞர்.

‘வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா.
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா..
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா

மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? என்பார்.
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? என்று கேட்பார்.
தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? என்ற சொல் வியக்கவைக்கும். தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?

அவள் காட்டும் அன்பிலா? என்று எல்லாவற்றையும் ‘லா’ போட்டு முடிப்பார்.

இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? என்பார். கூடவே, வயலினும் பாடிக்கொண்டிருக்கும்.
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா?

சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? என்று பாடும் போது, எஸ்.பி.பி. குழைவார். ‘அருளிலா’ எனும் போது சிலிர்ப்பார்.

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! என்று வியந்தும் மகிழ்ந்துமாக காதலையும் இசையையும் கொண்டு வந்து நமக்குள் கடத்திவிடுவார் எஸ்.பி.பி.

இன்றைக்கு ‘பாடும் நிலா’ என்றெல்லாம் எஸ்.பி.பி.யைச் சொல்லுகிறோம். போற்றுகிறோம். கொண்டாடுகிறோம். ‘ஆயிரம் நிலவே வா’ என்று இரண்டாவது பாடலில் பாடத் தொடங்கியவர்... ‘பட்டினப் பிரவேசம்’ படத்துக்குப் பின்னரும் ‘இளையநிலா பொழிகிறதே’, ‘பாடும் நிலாவே’ என்றெல்லாம் எத்தனையோ பாடியிருக்கிறார். ‘நிலாவே வா’ என்று அழைத்திருக்கிறார்.

ஆனாலும் 77ம் ஆண்டு,செப்டம்பர் 9ம் தேதி வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் ‘வான் நிலா நிலா அல்ல’ பாடல் தனி கிக். தனி சுகம். தனி சந்தோஷம். நமக்கும் இந்தப் பாடலுக்குமான தனி உறவு. பாடல் வெளியாகி, 43 ஆண்டுகளாகின்றன.

இப்படியொரு பாடலை வேண்டுமென்று கேட்ட பாலசந்தர், அதற்கு அப்படியொரு டியூனைப் போட்டுக் கொடுத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், அழகான டியூனுக்கு அட்டகாசமாக பாடலை எழுதிக் கொடுத்த கவியரசர் கண்ணதாசன், காதலையும் கவிதையையும் குழையக்குழையக் குரலில் இழைத்து இழைத்துக் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம்... முக்கியமாக... பாடல் முழுவதும் நம்மையும் மனதையும் செவியையும் வருடிக்கொடுத்த வயலின்... அந்த வயலினை வாசித்தவர் (மணி என்று நினைவு) என எல்லோருக்கும் வானளவுக்கு பூங்கொத்து. ஆளுக்கொரு நிலா பார்சல்!


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x