Published : 08 Sep 2020 08:17 PM
Last Updated : 08 Sep 2020 08:17 PM
கமல் படத்தை இயக்குவது எப்போது என்ற கேள்விக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்துள்ளார்.
'துப்பாக்கி', 'கத்தி' மற்றும் 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய்யை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினி, விஜய், அஜித், சிரஞ்சீவி, ஆமிர் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், கமல் படம் மட்டும் இன்னும் இயக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதில் கமல் படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பதாவது:
"கமல்ஹாசனை நினைத்தால் எனக்குப் பயமே உண்டு, ஏனென்றால் அவரை வைத்துப் படம் இயக்கும் அளவுக்கு எனக்கு அறிவுண்டா என்று யோசிப்பேன். இந்த நூற்றாண்டின் அற்புதக் கலைஞன் அவர். பல இயக்குநர்களுக்கு அவர்கள் வாழ்வின் சிறந்த படம் என்பது கமலுடன் தான் இருக்கும்.
கே விஸ்வநாத்தின் இரண்டு சிறந்த படங்கள் 'சிப்பிக்குள் முத்து', 'சலங்கை ஒலி', பாரதிராஜாவின் சிறந்த '16 வயதினிலே', ஷங்கரின் சிறந்த படம் 'இந்தியன்', மணிரத்னம் எடுத்த சிறந்த படம் 'நாயகன்', கெளதம் மேனனின் சிறந்த படம் 'வேட்டையாடு விளையாடு' இப்படி எல்லா இயக்குநர்களுக்கும் கமல்ஹாசனுடன் இணைந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது.
எனவே நாம் கமலுடன் இணைந்தால் அது சிறந்த படமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வேடிக்கை மட்டும் பார்ப்போம் என்று அமைதியாக இருக்கிறேன். கண்டிப்பாக அவருடன் ஒரு படம் எடுப்பேன் என்று நம்புகிறேன். அது என் வாழ்வில் சிறந்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்"
இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT