Published : 07 Sep 2020 03:13 PM
Last Updated : 07 Sep 2020 03:13 PM

இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா? - டி.ஆர் காட்டம்

சென்னை

இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா என்று டி.ஆர் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு டிக்கெட்டில் 12% ஜிஎஸ்டி வரியாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதுள்ளது. ஆனால், தமிழகத்தில் அதையும் தாண்டி 8% கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாக தமிழ்த் திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கரோனா அச்சுறுத்தலால் 150 நாட்களைக் கடந்து இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. விரைவில் திறப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே இயக்குநர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% ஜிஎஸ்டி வரி. அதை விடக் கூடுதலாக தமிழக அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 8% கேளிக்கை (எல்பிடி) வரி. மத்திய அரசு போட்டுவிட்டது ஜிஎஸ்டி வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது கூடுதல் வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.

மத்திய அரசு சொல்வது ஒரே நாடு ஒரே வரி, ஆனால் இந்த தமிழ்நாடு மாநிலத்தில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா? எங்கள் திரையுலகைக் கொடுக்கிறார்களா காவா?

இதே கோடம்பாக்கத்திலுருந்து வந்து தமிழகத்தை 5 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக திரையுலகிற்குக் கேளிக்கை வரியைச் செய்தார் ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழகத்தை 3 முறை ஆண்ட முன்னாள் முதல்வர் அம்மா அவர்களும் தமிழக அரசின் மூலமாகத் தமிழக திரையுலகிற்குக் கேளிக்கை வரியைச் செய்தார் ரத்து.

மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அவர்கள் அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்குப் பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழக திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?

சாதா காலங்களிலேயே சினிமா பெரும்பாடு படுகிறது, மேலும் இந்த கரோனா காலத்தில் பெரும் பிரச்சனை. திரையரங்குகளைத் திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள். எங்களால் இந்த இடர்களைத் தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சிக் காலம் முடியப் போகிறது, எப்போது எங்கள் தமிழ் திரையுலகிற்குப் பொழுது விடியப் போகிறது?. பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி.

இது கோடம்பாக்கத்துத் தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதைச் சாதாரணமாகப் போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை"

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x