Published : 07 Sep 2020 01:29 PM
Last Updated : 07 Sep 2020 01:29 PM
ரியா சக்ரபர்த்தியிடம் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பாக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர். இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து ரியா சக்ரபர்த்தியிடமும் நேற்று (செப்டம்பர் 6) விசாரணை நடத்தியுள்ளது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. இதற்கான ரியா சக்ரபர்த்தி வந்த போது, அவரை ஊடகங்கள் சூழ்ந்தன. கடுமையான நெருக்கடியைக் கடந்தே ரியா சக்ரபர்த்தி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குள் செல்ல முடிந்தது.
இது வீடியோ பதிவாக சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு முன்னணி திரையுலக பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்களுடைய சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
ஜெனிலியா: எல்லோரும் செய்கிறார்கள் என்றாலும் தவறு, தவறுதான். யாரும் செய்யவில்லையென்றாலும் சரியானது, சரியானதுதான். ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை. சற்று பொறுமையுடன் இருப்போம். அதிகாரிகள் உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள் என்று அவர்களை நம்புவோம்.
லட்சுமி மஞ்சு: இது அருவருப்பைத் தாண்டி உள்ளது. ஒரு பெண்ணை இப்படி நடத்தக்கூடாது. ஒருவரை நாம் எப்படி இவ்வளவு பயங்கரமாக நடத்தலாம், (சக) மனிதர் மீது கண்ணியம் காட்டாமல் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் பார்த்து மனமுடைந்துள்ளேன்.
டாப்ஸி: நீதியின் பெயரால் இந்த மக்கள் ஒரு மனிதர் மீது, வாழ்வதற்கான அவரது உரிமை மீது கும்பலாக வன்முறை நிகழ்த்தியுள்ளனர். அதுவும் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்படுவதற்கு முன்பே. நாம் காணும் இந்த தரக்குறைவான கும்பலில் ஒவ்வொரு மனிதரையும் கர்மா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
தியா மிர்சா: சட்டம் அதன் கடமையைச் செய்ய வேண்டும், செய்யும். இந்த நடத்தை எல்லா வகையிலும் கண்டிக்கத்தக்கது. போதும். ரியாவுக்கு ஏன் அவருக்கான இடத்தை, தனிமனித விலகலுக்கான உரிமையைத் தந்திருக்கக் கூடாது? ஏன் ஊடகங்கள் கழுகுகளைப் போல நடந்து கொள்கின்றன? தயவு செய்து ரியாவுக்கு அவருக்கான இடத்தைக் கொடுங்கள். அவரையும், அவர் குடும்பத்தையும் தாக்குவதை, மனிதத்தன்மையற்று நடத்துவதை நிறுத்துங்கள்.
ஹுயூமா குரோஷி: நம்மிடையே என்ன கோளாறு? நாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது? கண்டிப்பாக உண்மை வெளியே வரும் ஆனால் ஒரு பெண்ணாக இவருக்கான இடம் தேவை. அடிப்படை மரியாதை, சமூக விலகலுக்கான உரிமை தேவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment