Published : 05 Sep 2020 11:18 AM
Last Updated : 05 Sep 2020 11:18 AM
தெலுங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் பிரபலமானவர் நுதன் நாயுடு. ‘பரன்னஜீவி’ என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். ‘ஹெஸா’, ‘எஃப்2’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28 அன்று நுதன் நாயுடுவின் வீட்டில் இருந்த செல்போன் ஒன்று தொலைந்து போனது. தங்கள் வீட்டில் பணிபுரிந்து வரும் தலித் இளைஞரான பாரி ஸ்ரீகாந்த் என்பவர்தான் அந்த செல்போனை திருடியிருக்க வேண்டும் என்று முடிவு செய்த நுதன் நாயுடுவின் மனைவி வீட்டில் பணிபுரிந்து வரும் மற்ற பணியாளர்களோடு சேர்ந்து ஸ்ரீகாந்த்தை அடித்து துன்புறுத்தி அவருக்கு மொட்டை அடித்துள்ளார்.
தான் தாக்கப்பட்டது குறித்து ஸ்ரீகாந்த் விசாகப்பட்டினம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இது தொடர்பாக மறுநாள் நுதனின் மனைவி ப்ரியா மாதுரி உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தகவல் நுதன் நாயுடுவுக்கு தெரிய வந்துள்ளது.
தன் மனைவியை காப்பாற்றுவதற்காக தன் மொபைல் போனிலிருந்து ஆந்திரா மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் கிங் ஜார்க் மருத்துவமனை மேலதிகாரிகளுக்கு போன் செய்து தான் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரமேஷ் என்று கூறி தனக்கு வேண்டிய ஏழு பேருக்கு மருத்துவ சான்றிதழ் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
சந்தேகமடைந்த அவர்கள் நேரடியாக ஐஏஎஸ் ரமேஷை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். உடனடியாக ரமேஷ் விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனிஷ் குமார் சின்ஹாவை தொடர்பு கொண்டு தன் பெயரை பயன்படுத்தி யாரோ மோசடியில் ஈடுபட முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
விசாரணையில் நுதன் நாயுடு ஐஏஎஸ் ரமேஷைப் போல ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய மொபைல் போனில் உள்ள சில செயலிகளிலும் தன் பெயரை ரமேஷ் என்று கொடுத்து வைத்திருந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனிடையே விசாகப்பட்டினத்திலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மங்களூரு செல்ல முயன்ற நுதன் நாயுடுவை கர்நாடக போலீஸாரின் உதவியுடன் விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து நான்கு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்து கொண்டு வரும் வழியில் ஒரு செல்போனை நுதன் தூக்கி வீச முயற்சி செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT