Published : 04 Sep 2020 09:57 PM
Last Updated : 04 Sep 2020 09:57 PM

'மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்

சென்னை

'மன்னவன் வந்தானடி' படத்தின் மீதான சிக்கல்கள் அனைத்து தீர்ந்துவிட்டதால், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க, படக்குழு திட்டமிட்டு வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம், அதிதி போகன்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மன்னவன் வந்தானடி'. சுஷாந்த் பிரசாத், சித்தார்த் ராவ், செல்வராகவன், கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். 80% வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்துக்குப் பிறகே 'என்.ஜி.கே' படத்தை இயக்கினார் செல்வராகவன். அதற்குப் பிறகும் கூட 'மன்னவன் வந்தானடி' படம் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. ஏனென்றால் ’மன்னவன் வந்தானடி’ படத்தின் மொத்த உரிமையையும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்துக்கு விற்க, படத்தின் தயாரிப்பாளர்கள் முயன்றதாகக் கூறப்பட்டது.

இதனால் படத்தின் நெகட்டிவ் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்ட மொத்த உரிமையையும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கிலும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் வருண் மணியனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. படத்தை மீண்டும் தொடர முடியாமலும், விற்க முடியாமலும் முடங்கியது.

தற்போது 'மன்னவன் வந்தானடி' படத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் தீர்ப்பதற்காக, வருண் மணியனே தயாரிப்பாளர்களிடம் பேசி ஒட்டுமொத்தப் படத்தையும் கைப்பற்றிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான அனைத்துச் சிக்கல்களுமே தீர்ந்துவிட்டன. விரைவில் மீதமுள்ள 20% காட்சிகளின் படப்பிடிப்புக்காக செல்வராகவன் - சந்தானம் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் படத்தின் மீதான சிக்கல்கள் தீர்ந்திருப்பது தொடர்பாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x