Published : 03 Sep 2020 03:21 PM
Last Updated : 03 Sep 2020 03:21 PM
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதற்கு இயக்குநர் அறிவழகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள். சீனா தரப்பிலும் சேதம் ஏற்பட்டது.
சீனாவின் இந்த அத்துமீறல் நடவடிக்கைக்குப் பதிலடியாக கடந்த ஜூன் 29-ம் தேதி டிக் டாக், யூசிபிரவுசர், ஷேர் இட், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட சீனாவின் 59 ஸ்மார்ட்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 2) இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்கும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பப்ஜி உள்பட சீனாவின் 118 ஸ்மார்ட்போன் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இது பப்ஜி விளையாட்டு ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு மட்டும் 3.30 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பப்ஜி விளையாட்டுக்குத் தடை விதித்திருப்பது தொடர்பாக இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் சிறந்த முடிவு இது. பாதுகாப்புக் காரணங்களைத் தாண்டி, பல்வேறு புதுமையான விஷயங்களைச் செய்யவிடாமல், குழந்தைகள், இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பப்ஜி முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைத்துப் பெற்றோரும் இதை வரவேற்பார்கள். இந்தியாவில் உருவான பப்ஜி என்று எதுவும் வராது என நம்புகிறேன்".
இவ்வாறு இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
தற்போது அருண் விஜய், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் அறிவழகன். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு விட்டதால், விரைவில் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு.
Indian Make*
— Arivazhagan (@dirarivazhagan) September 2, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT