Published : 02 Sep 2020 04:11 PM
Last Updated : 02 Sep 2020 04:11 PM
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை விவகாரத்தில் தனது அடுத்த கட்ட குற்றச்சாட்டுகளை நடிகை கங்கணா ரணவத் அடுக்கியுள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை, சிபிஐ விசாரணை என இன்று வரை பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் ஆரம்பம் முதலே கரண் ஜோஹர் உள்ளிட்ட பாலிவுட் வாரிசுகள் சுஷாந்தை ஓரங்கட்டினர். இந்த மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கணா ரணவத் குற்றம்சாட்டி வந்துள்ளார். மேலும் பாலிவுட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கணா ரணவத் பல தரப்புகளை அடுத்தடுத்து சாடி ட்வீட் செய்துள்ளார்.
தனது புத்தக அறிமுகம் குறித்து கரண் ஜோஹர் ட்வீட் மற்றும் காணொலி ஒன்றைப் பகிர்ந்தார். இதற்கு நேரடியாக பதிலளித்திருக்கும் கங்கணா "கரண் ஜோஹர், ஆதித்யா சோப்ரா, ராஜீவ் மஸாந்த், மகேஷ் பட் மேலும் ரத்த வெறி பிடித்த ஒட்டு மொத்த கழுகுக் கூட்ட படை, ஊடக மாஃபியா தான் சுஷாந்தை கொலை செய்தது. சுஷாந்தின் குடும்பம் துன்புறுத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு வருகிறது. இங்கு கரண் ஜோஹர் தனது குழந்தைகளை வெட்கமின்றி தூக்கிப் பிடிக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, ஒருவர் கங்கணா உள்ளிட்ட சிலரைப் பெயர் குறிப்பிடாமல் கிண்டல் செய்திருந்தார். இந்த கருத்தை மும்பை காவல்துறை ட்விட்டர் பக்கம் லைக் செய்திருந்தது. இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பகிர்ந்திருக்கும் கங்கணா, "பொதுவில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்தின் கொலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்துள்ளது. இதை விட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது.
என்னை இப்படி வெளிப்படையாக மும்பை காவல்துறை அச்சுறுத்தும் போது, எனக்கெதிரான அவதூறை ஊக்குவிக்கும் போது நான் மும்பையில் பாதுகாப்புடன் இருக்க முடியுமா. என் பாதுகாப்புக்கு யார் காரணம்" என்ற பிரதமரின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மும்பை காவல்துறை தரப்பிலிருந்து இது குறித்து விசாரிப்பதாகப் பதில் அளிக்கப்பட்டும் கங்கணா அதில் திருப்தியடையாமல் தொடர்ந்து காவல்துறை தரப்பைச் சாடியுள்ளார்.
அடுத்ததாக இயக்குநர் அனுபவ் சின்ஹா, தனது ட்விட்டர் பக்கத்தில், "90 சதவித பாலிவுட் போதை மருந்து பயன்படுத்துகிறது என்று சொல்கிறவர்கள் தான் முதலில் போதையில் இருக்கிறார்கள். போதை மருந்து விற்பனை செய்பவர்கள் மத்தியிலேயே உபயோகம் மிகக் குறைவாக இருக்கும்" என்று கருத்துப் பதிவிட்டிருந்தார்.
இதையும் விடாமல் தன்னை சொன்னதாக எடுத்துக் கொண்ட கங்கணா, "நான் குறிப்பாக அதிக செல்வாக்குள்ள பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் பார்டி என்றே சொல்லியிருந்தேன். அது போன்ற பார்ட்டிகளுக்கு உங்களைப் போன்றவர்களை அழைக்கவே மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும் ஏனென்றால் அதில் இருப்பவை எல்லாம் விலையுயர்ந்த போதை வஸ்துக்கள். 99 சதவீத சூப்பர் ஸ்டார்களுக்கு போதை மருந்து பழக்கம் இருந்துள்ளது. என்னால் நிச்சயமாகக் கூற முடியும்" என்று பதிலளித்துள்ளார்.
மேலும் "ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, விக்கி கவுஷிக் ஆகியோர் போதை மருந்து பரிசோதனைக்கு தங்கள் ரத்த மாதிரியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் கொக்கைன் அடிமைகள் என்று புரளிகள் உள்ளன. இந்த புரளிகளை அவர்கள் தீர்க்க வேண்டும். இவர்கள் சுத்தமாக இருந்தால் அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கலாம்" என்றும் கங்கணா ட்வீட் செய்துள்ளார். இதிலும் பிரதமரின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment