Published : 01 Sep 2020 09:42 PM
Last Updated : 01 Sep 2020 09:42 PM

சுஷாந்த் சிங்கின் மரணம் ஊடகங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது: வித்யா பாலன் சாடல்

மும்பை

சுஷாந்த் சிங்கின் மரணம் ஊடகங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது என்று வித்யா பாலன் கடுமையாகச் சாடியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவரது தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டாலும், ரியா சக்ரபர்த்தியும் அவரது குடும்பத்தினரும் தான் தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என்று சுஷாந்தின் தந்தை காவல்துறையில் புகார் அளித்தார். தற்போது இந்த வழக்கு தீவிரம் பெற்று, சிபிஐ விசாரித்து வருகிறது.

சமூக ஊடகத்தில் பலரும் ரியாவே எல்லாவற்றுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். இதில் சில திரையுலகப் பிரபலங்களும் அடங்குவர். இதனிடையே ரியாவுக்கு ஆதரவாக நடிகை லட்சுமி மஞ்சு சிறிய கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.

அதில், "எனக்கு நம் நாட்டின் நீதி அமைப்பின் மீதும், சுஷாந்துக்கு நீதி பெற முயன்று வரும் அமைப்புகள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அதுவரை, உண்மை என்னவென்று தெரியாமல் ஒரு நபரையும், அவரது குடும்பத்தையும் தாக்கி, அவர்களுக்குத் தீமையும், கொடுமையும் செய்யாமல் இருப்போமா.

ஊடகங்களின் இந்த விசாரணைகளால் அந்த மொத்தக் குடும்பமும் எதுபோன்ற வலியை அனுபவிக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் லட்சுமி மஞ்சு. இந்தக் கடிதத்துக்கு டாப்ஸியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

தற்போது லட்சுமி மஞ்சுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் வித்யா பாலன். இது தொடர்பாக வித்யா பாலன் கூறியிருப்பதாவது:

"இதை உரக்கச் சொன்னதற்குக் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் லட்சுமி மஞ்சு. அன்பார்ந்த இளம் நட்சத்திரம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் திடீர் மரணம், ஊடகங்களில் கேலிக்கூத்தாகியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணாக, ரியா சக்ரபர்த்தியை நிந்திப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்று தானே சொல்லுவார்கள் அல்லது குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி என்று மாறிவிட்டதா? ஒரு குடிமகனுக்கு அரசியலமைப்பு தரும் உரிமைகளை மதிப்போம். சட்டம் அதன் கடமையைச் செய்ய விடுவோம்".

இவ்வாறு வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x