Last Updated : 30 Aug, 2020 05:34 PM

1  

Published : 30 Aug 2020 05:34 PM
Last Updated : 30 Aug 2020 05:34 PM

சென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை

சென்னையின் 53 ஆண்டுக்கால பழமை வாய்ந்த 'அகஸ்தியா 70எம்.எம்' ஐகான் திரையரங்கம் வருகிற செப்.1 ம் தேதியுடன் நிரந்தரமாக மூடப்படுகிறது.

கடந்த 1967-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த திரையரங்கில் முதல் திரைப்படமாக 'பாமா விஜயம்' திரையிடப்பட்டுள்ளது. வட சென்னை, தண்டார்பேட்டையில் உள்ள இந்த திரையரங்கில் 1004 இருக்கைகள் கொண்ட சென்னையில் முதல் பிரதான பெரிய திரையரங்காக எழுப்பப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர்.நடிப்பில் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன், 'காவல்காரன்', சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த 'சிவந்த மண்', 'சொர்க்கம்' உள்ளிட்ட படங்கள் 100 நாட்கள் திரையிடப்பட்டு வெள்ளிவிழா கண்ட சிறப்புக்குரிய அரங்கம் இது.

அதேபோல, ரஜினி நடிப்பில் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்', 'பைரவி', 'ப்ரியா', 'படிக்காதவன்' உள்ளிட்ட படங்களும் கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்', 'தேவர் மகன்' ஆகிய படங்களும் சூர்யா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' திரைப்படமும் வெள்ளிவிழா கண்டன. அஜித் நடிப்பில் அறிமுகமான 'அமராவதி' பின்னர் நடித்த 'தினா' ஆகிய படங்களும் இந்த திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் பலரின் திரைப்பட படப்பிடிப்பு காட்சிகளும் இந்த திரையரங்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழு சுகாதார வசதிகளுடன் இயங்கிய நான் - ஏசி திரையரங்கு என்ற பெருமைக்குரிய அகஸ்தியா 70 எம்.எம் திரையரங்கு வழியே அதன் நிர்வாகத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாகப் பெரிதாக வருமானம் எதுவும் இல்லாததால் தற்போது திரையரங்கை மூட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அகஸ்தியா திரையரங்கு அமைந்துள்ள இடத்தில் அடுத்து எம்மாதிரி புதிய கட்டிடம் , திறக்கப்படும்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்தபோது, 'கரோனா தொற்று வைரஸ் அச்சுறுத்தல் குறையத் தொடங்கிய பிறகுதான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும்!' என்றனர். வடசென்னை பகுதியில் மிக முக்கியமான திரையரங்கமாக இருக்கும் அகஸ்தியா மூடப்படுவது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x