Published : 29 Aug 2020 01:02 PM
Last Updated : 29 Aug 2020 01:02 PM

போட்டியின்றி தேர்வான நிர்வாகிகள்: தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யாருக்கு என்ன பதவி?

சென்னை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சங்கத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கினார்கள். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தயாரிப்பாளர்கள் தாணு, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, கமீலா நாசர் உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தும், புதிய தயாரிப்பாளர் சங்கம் ஆரம்பிப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நேற்று (ஆகஸ்ட் 28) ஜூம் செயலி வழியே தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் கூடினார்கள். அப்போது தேர்தல் அதிகாரி விஜயகுமாரும் இருந்தார். அப்போது தலைவராக பாரதிராஜா, செயலாளராக டி.சிவா, துணைத் தலைவர்களாக தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், இணைச் செயலாளர்களாக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர்களை எதிர்த்து வேறு யாரேனும் போட்டியிடுகிறீர்களா என்று தேர்தல் அதிகாரி கேட்டார். யாருமே முன்வரவில்லை என்பதால் இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வானார்கள். அதனைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கு யாரெல்லாம் போட்டியிடுகிறீர்கள் என்று தேர்தல் அதிகாரி கேள்வி எழுப்பினார்.

அதற்கு நந்தகோபால், மதன், சி.வி.குமார், ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன், டில்லி பாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுதர்சன், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் விரும்புவதாகத் தெரிவித்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வேறு யாரும் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத காரணத்தால், இவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜூம் செயலி வழியே அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி விஜயகுமார் நிர்வாகிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவர்களுடைய நிர்வாகம் 2022-ம் ஆண்டு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x