Published : 28 Aug 2020 12:02 PM
Last Updated : 28 Aug 2020 12:02 PM
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான 'தில் பெச்சாரா' திரைப்படம்தான், ஓடிடி தளங்களில் வெளியாகி, முதல் வாரத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த படம் என்பது தெரியவந்துள்ளது.
அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ5, வூட் மற்றும் எம்எக்ஸ் ப்ளேயர் ஆகிய தளங்களில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20 வரை வெளியான இந்தித் திரைப்படங்கள் பார்க் மற்றும் நீல்ஸன் நிறுவனங்கள் நடத்திய இந்த ஆய்வில் இடம்பிடித்தன.
இதில் வெளியான முதல் வாரத்தில், அதிக பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படம் என்கிற பட்டியலில் 'தில் பெச்சாரா' முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் ஆக்ஷன் திரைப்படமன 'குதா ஹாஃபிஸ்' இடம் பிடித்துள்ளது.
வெப் சீரிஸ் பட்டியலில் 'மஸ்த்ராம்' தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை 'பாந்திஷ் பாண்டிட்ஸ்', 'டேஞ்சரஸ்' மற்றும் 'ஆர்யா' ஆகிய தொடர்கள் பிடித்துள்ளன. சில முக்கிய சீனச் செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் பயன்பாடு லேசாகக் குறைந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செங்கோட்டையில் நடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை 460 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் நேரலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் இதுவே மிகப்பெரிய எண்ணிக்கையாகும். மேலும், ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த உரைகளில், இந்த சுதந்திர தின உரைக்குத்தான் அதிக பார்வைகள் கிடைத்துள்ளன.
கடந்த இரண்டு வருடங்களை விட, இந்த வருடம், சுதந்திர தின நிகழ்ச்சியின் நேரலையைப் பார்க்க அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், அயோத்தியில் நடந்த ராமர் கோயிலுக்கான பூமி பூஜை விழாவை நேரலையில் 16.3 கோடி மக்கள் பார்த்துள்ளனர். மொத்தம் 730 கோடி நிமிடங்கள் இந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT