Last Updated : 27 Aug, 2020 11:26 AM

 

Published : 27 Aug 2020 11:26 AM
Last Updated : 27 Aug 2020 11:26 AM

பாலிவுட்டில் போதைப்பொருட்கள்: கங்கணா கிளப்பும் புதிய சர்ச்சை!

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து சாடிப் பேசி வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பாகவும், பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது ரசிகர்களும் வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்குச் சென்று அவர்களைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு அரசியலைத் தொடர்ந்து பாலிவுட் உலகில் நிலவும் போதைப்பொருள் புழக்கம் பற்றிய இன்னொரு புது சர்ச்சையையும் கங்கணா தற்போது கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளை வெளியிட்டும் வருகிறார்.

இதுகுறித்து கங்கணா கூறியிருப்பதாவது:

''பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன்தான். கிட்டத்தட்ட எல்லா ஹவுஸ் பார்ட்டிகளிலும் அது தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அது விலையுயர்ந்த போதைப்பொருள்தான். ஆனால், பெரிய நடிகர்களின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்குச் சென்றால் தொடக்கத்தில் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்பட்டு, சில நேரம் உங்களுக்குத் தெரியாமலே உங்களுக்குள் செலுத்தப்படும்.

போதைப்பொருள் தடுப்பு போலீஸாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். இதனால், என் தொழிலுக்கு மட்டுமல்ல என் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். சுஷாந்துக்கு சில கோர உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார்.

மேலும், போதைப்பொருள் தடுப்பு போலீஸார் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பெரும் பிரபலங்கள் பலர் சிறைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும். பாலிவுட் என்ற சாக்கடையைத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன்.

நான் மைனர் பெண்ணாக இருந்தபோது என்னுடைய வழிகாட்டியாக இருந்த ஒருவர் என்னுடைய குளிர்பானங்களில் போதைப் பொருளை எனக்குத் தெரியாமல் கலந்து கொடுத்துவிடுவார். ஆனால், நான் பிரபலமானதும் பெரிய படங்களின் பார்ட்டிகளுக்குச் சென்றபோது அங்கு ஒரு போதைப்பொருள் மற்றும் மாஃபியா உலகம் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x