Published : 24 Aug 2020 02:32 PM
Last Updated : 24 Aug 2020 02:32 PM
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கவுன் பனேகா க்ரோர்பதியின் 12-வது சீஸனின் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதாக நடிகர் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் கோவிட்-19 பாதிப்பிலிருந்து அமிதாப் பச்சன் மீண்டார். முறையான பாதுகாப்புகளுடன் இந்தப் படப்பிடிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள பச்சன், மார்ச் மாதத்துக்குப் பிறகு படப்பிடிப்பு அரங்குக்குச் செல்வது இதுவே முதல் முறை.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள், வேலைகள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொலைக்காட்சி, திரைப்படப் படப்பிடிப்புகளுக்கும் தடை இருந்தது. தற்போது பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 12-வது சீஸன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இதுகுறித்துப் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், "ஆரம்பமாகிவிட்டது. அந்த நாற்காலி, அந்தச் சூழல், கேபிசி 12. 2000-ம் ஆண்டு ஆரம்பித்தது. இன்று 2020-ம் ஆண்டு. இவ்வளவு வருடங்கள் கடந்திருப்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. நிகழ்ச்சி இன்னும் தாக்குப் பிடித்துள்ளது.
(சூழல்) அமைதியாக, விழிப்பாக, அனைவருக்கும் வேலை ஒதுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையோடு, தனி நபர் விலகல், முகக் கவசங்கள், கிருமி நாசினி அனைத்தும் உள்ளன. இந்த நிகழ்ச்சி என்ன ஆகும் என்ற ஐயம் மட்டுமல்ல, கோவிட்-19க்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும் என்ற ஐயமும் எனக்கிருக்கிறது.
முன்பிருந்த நட்புணர்வு இந்த அரங்கில் இப்போது இல்லை. தேவையிருந்தால் மட்டுமே ஒருவரோடு ஒருவர் பேசுகின்றனர். ஏதோ ஆழமான அறிவியல் ஆராய்ச்சி நடக்கும் பரிசோதனைக் கூடம் போல இருக்கிறது. இதை எதிர்பார்த்ததே இல்லை. ஆனால், இதோ நடக்கிறது.
தெரிந்த முகங்களை தற்போது அடையாளம் காண முடியவில்லை. நாம் சரியான இடத்தில் இருக்கிறோமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனால் இந்த அச்சங்களை வெல்ல வேண்டும். என் மீது அதிக சலுகையும், அக்கறையும் காட்டப்படுகிறது. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கவனமுடன் பின்பற்றப்படுகின்றன.
இம்முறை எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்று அவர்கள் பயப்படுவது தெரிகிறது. லேசான மனம் தனிமைப்படுத்தப்பட்டு, தன்னை பூட்டிக்கொண்டு விட்டது. செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும் என்பதே நிலை" என்று அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கிருக்கும் சுவாசப் பிரச்சினை குறித்தும் பதிவிட்டுள்ள அமிதாப், நுரையீரலுக்குப் பயிற்சி கொடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். குறைந்தது 45 விநாடிகள் மூச்சைப் பிடித்து விடுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
'தங்கல்' திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கும் கவுன் பனேகா க்ரோர்பதியின் இந்த சீஸனுக்கான போட்டியாளர்கள் தேர்வு முழுக்க முழுக்க டிஜிட்டலாக இணையம் மூலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT