Published : 23 Aug 2020 02:44 PM
Last Updated : 23 Aug 2020 02:44 PM
தான் இயக்கியுள்ள 'சூஸைட் ஸ்குவாட்' திரைப்படம் இதுவரை வந்த சூப்பர்ஹீரோ திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபடும் எனப் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார்.
டிசி காமிக்ஸின் அடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிவிப்புகள், முன்னோட்டங்கள் இணையம் வழியாக நடந்த 'டிசி ஃபேன்டம்' என்ற பொது நிகழ்ச்சியில் சனிக்கிழமை அன்று ரசிகர்களுடன் பகிரப்பட்டன. இதில் 'சூஸைட் ஸ்குவாட்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் உருவாக்கம் மற்றும் நடிகர்களின் சின்ன சின்ன பேட்டிகள் கொண்ட முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கன் பேசுகையில், "படம் பற்றி தயாரிப்புத் தரப்பு அதிக மகிழ்ச்சியில் இருக்கிறது. படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. படம் நகைச்சுவையாகவும், சரியான இடங்களில் உணர்ச்சிமயமாகவும் இருக்கிறது. படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இறுதிகட்ட வேலைகளில் இவ்வளவு தூரம் நான் உற்சாகமாக இருப்பது இந்தப் படத்தில் தான். இந்தப் படம், இதுவரை வந்த சூப்பர் ஹீரோ திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த முன்னோட்ட காணொலியின் மூலம், முதல் படத்தில் ப்ளட் ஸ்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வில் ஸ்மித்துக்கு பதிலாக இட்ரிஸ் எல்பா நடிப்பதும், பீஸ் மேக்கர் கதாபாத்திரத்தில் பிரபல ரெஸ்ட்லிங் வீரர் ஜான் சீனா நடிப்பதும் தெரிய வந்துள்ளது.
கேப்டன் அமெரிக்கா கடுப்பேற்றினால் எப்படி இருக்குமோ அதுவே தனது கதாபாத்திரம் என்று ஜான் சீனா கூறியுள்ளார். இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான கிராஃபிக் நாவல் திரைக்கு வந்ததைப் போல இருப்பதாக இட்ரிஸ் எல்பா கூறியுள்ளார். ஹார்லே குவின் கதாபாத்திரத்தில் மீண்டும் மார்கட் ராபி இந்தப் படத்தில் நடிக்கிறார்.
"இந்தப் படம் தனித்துவமானது, ஆக்ரோஷமா 70-களில் வந்த போர் திரைப்படங்களைப் போன்றது. அதோடு சேர்த்து இயக்குநர் ஜேம்ஸ் கன்னின் புத்திசாலித்தனமும், அற்புதமான கதாபாத்திரங்களும், நகைச்சுவையும் கொண்டது" என தயாரிப்பாளர் பீட்டர் சஃப்ரான் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட அனைத்து மார்வல் திரைப்படங்களிலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை செய்திருக்கும் டான் சூடிக் என்பவர் தான் 'சூஸைட் ஸ்குவாட்' படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸை கவனித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள ஜேம்ஸ் கன், "எந்தப் படத்தையும் விட அதிகமான வெடிக்கும் காட்சிகளும், வாகன மோதல்களும் இந்தப் படத்தில் உள்ளன. தான் வேலை செய்த அனைத்துப் படங்களையும் சேர்த்தால் கூட, அதைவிட அதிகமாக இதில் எஃபெக்ட்ஸுக்கான பணி இருப்பதாக டான் சூடிக் சொன்னார்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT