Published : 22 Aug 2020 02:02 PM
Last Updated : 22 Aug 2020 02:02 PM
தனது 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது தொடர்பாக சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய திரைப்படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தயாராகி இருக்கும் படங்கள் யாவும், ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சி செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள்.
இதில் 'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்', 'லாக்கப்' உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. தொடக்கத்தில் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு அமைதி காக்கத் தொடங்கினார்கள்.
இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 22) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாரும் எதிர்பாராத விதமாக 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் தமிழ்த் திரையுலகினர் பலரும் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால், தென்னிந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் பெரிய ஹீரோ படமாக 'சூரரைப் போற்று' அமைந்துள்ளது.
'சூரரைப் போற்று' ஓடிடி தளத்தில் வெளியாவது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது' என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்இருக்கும் சூழலில், பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.
இயக்குநர் சுதா கொங்கராவின் பல ஆண்டுக்கால உழைப்பில் உருவாகியுள்ள, 'சூரரைப் போற்று' திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை, திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனைத் திறனிலும். கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தைச் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கியக் கடமை.
எனது 2டி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் இதுவரை எட்டுப் படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்துப் படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்படப் பலரின் நலன் ௧ருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.
'சூரரைப் போற்று' திரைப்படத்தை, 'அமேசான் ப்ரைம் வீடியோ' மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை. திரையுலகைச் சார்ந்தவர்களும், என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் மனம்கவர்ந்த திரைப்படமாக 'சூரரைப் போற்று' நிச்சயம் அமையும். மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள். கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.
இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, 'ஐந்து கோடி ரூபாய்' பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.
பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும். இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும். உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி குழலை மனவுறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம். நன்றி".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
Vinayagar Chathurthi wishes to all!#SooraraiPottruOnPrime @PrimeVideoIN pic.twitter.com/ZdYSF52ye2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT