Published : 21 Aug 2020 10:37 PM
Last Updated : 21 Aug 2020 10:37 PM

நமக்கு ஒன்றும் ஆகாது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்: தொழிலாளர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

ஹைதராபாத்

நமக்கு ஒன்றும் ஆகாது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள் என தொழிலாளர்களுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறவில்லை. இதனால் சினிமாவில் பணிபுரியும் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தெலுங்கில் திரையுலகில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் களமிறங்கினார்கள். இதற்கான கரோனா நெருக்கடி நற்பணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்தார்கள்.

அந்த நிதியின் மூலம் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. இதுவரை இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளன. தற்போது மூன்று முறையாக வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"படப்பிடிப்புகள் எதுவும் ஆரம்பமாகவில்லை. எப்போது ஆரம்பமாகும் என்று தெரியாத சூழல். வேலையின்றி, கையில் பணமின்றி, திரைத் தொழிலாளர்களின் நிலை மிகவும் கடினமாக உள்ளது. அதனால் தான் கரோனா நெருக்கடி நற்பணி (Corona Crisis Charity - CCC) மூலமாக மூன்றாவது முறையாக திரைத்துறை தொழிலாளர்களுக்கு (ரேஷன்) உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். அதற்கான விநியோக பணிகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

அனைத்து திரைப்பட சங்கங்கள், அமைப்புகள், திரைப்பட பத்திரிகையாளர்களோடு சேர்த்து, ஆந்திராவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு முன்பு கொடுத்தது போல இம்முறை இரண்டு மாநிலங்களிலும் (ஆந்திரம் - தெலங்கானா) இருக்கும் விநியோகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், அதாவது பிரதிநிதிகள், போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள் என அனைவருக்கும் உதவி சென்று சேர வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளோம். மொத்தம் 10,000 பேருக்கு நல உதவிகள் தரப்படவுள்ளன.

இந்த நேரத்தில் அனைவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கண்டிப்பாக இந்த நிலை நிரந்தரமல்ல. தற்காலிகமான ஒன்றே. இதை எதிர்த்து நாம் தைரியமாக நிற்போம். மீண்டும் வேலை செய்யும் நல்ல நாட்கள் பக்கத்தில் உள்ளன. உங்கள் குடும்பத்துக்கு இப்போது முக்கியமான தேவை உங்கள் ஆரோக்கியம். நமக்கு ஒன்றும் ஆகாது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள். தயவு செய்து, என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து உங்களைக் காத்துக் கொண்டு உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

இந்த விநாயக சதுர்த்தி நாளில் அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி, இந்தக் கடினமான சூழலிலிருந்து நம்மைக் காக்க வேண்டும், சகஜமான சூழல் நிலவ வேண்டும், எப்போதும் போல நாங்கள் அனைவரும் சந்தோஷமாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அந்த விநாயகப் பெருமானை நாம் அனைவரும் வேண்டுவோம். அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்"

இவ்வாறு சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x