Published : 17 Aug 2020 08:16 PM
Last Updated : 17 Aug 2020 08:16 PM
துருக்கி அதிபரின் மனைவி எமைன் எர்னவாவை சந்தித்த ஆமிர்கானுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'ஃபாரஸ்ட் கம்ப்' என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார். 'லால் சிங் சட்டா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. எனவே மரியாதை நிமித்தமாக, ஆமிர்கானே துருக்கியின் அதிபர் ரெஜிப் டயீப் எர்னவா மற்றும் அவர் மனைவியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
துருக்கி, பாகிஸ்தான் ஆதரவு நாடு. மேலும் பல தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதி அளித்து வருவதாக அந்நாட்டின் மீது புகார் எழுந்துள்ளது. காஷ்மீரில் 370-ம் பிரிவு நீக்கப்பட்டபோது அதை வெளிப்படையாக எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்திருந்தது துருக்கி.
இப்படியிருக்க, துருக்கி அதிபரின் மனைவியை அவரது இல்லத்தில் ஆமிர்கான் சந்தித்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி அதிபரின் மனைவி எமைன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆமிர்கான் சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படங்கள் பகிர்ந்திருந்தார்.
இதைக் குறிப்பிட்டு, பலரும் ஆமிர்கானின் நோக்கத்தைக் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவின் நட்பு நாடான இஸ்ரேலின் பிரதமரை ஆமிர்கான் சந்திக்க மறுத்திருக்கிறார். ஆனால் இப்போது துருக்கி அதிபர் மனைவியைச் சந்தித்திருக்கிறார் என்று ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.
பாஜக மாநிலங்களவை எம்பி சுப்பிரமணியன் சுவாமி, "3 கான் மஸ்கடியர்களில் ஆமிர்கானும் ஒருவர் என்று நான் வகைப்படுத்தியது சரியென நிரூபணமாகியுள்ளதோ" என்று நக்கலாக பதிவிட்டிருந்தார்.
தயாரிப்பாளர் அஷோக் பண்டிட், "அன்பார்ந்த ஆமிர் கான், சிலர் நீங்கள் 74வது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றார்கள். என்னால் அதை நம்ப முடியவில்லை. ஏனென்றால் மற்ற முக்கிய நாட்களில் நீங்கள் கண்டிப்பாக வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருந்தீர்கள். ஆனால் அவர்கள் சொன்னது உண்மையாகிவிட்டது" என்று ட்வீட் செய்துள்ளார்.
இன்னும் பலரும் ஆமிர் கானின் இந்த சந்திப்பைக் கண்டித்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT