Published : 15 Aug 2020 05:21 PM
Last Updated : 15 Aug 2020 05:21 PM
சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்னர், 1975-ம் ஆண்டின் ஆகஸ்ட் 15-ல் வெளியானது ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். அந்தப் படத்தில் திரையில் ரஜினி, பைரவி வீட்டின் கேட்டைத் திறந்து நுழையும்போது சுருதி பேதம் எனக் குறிப்பிட்டிருந்தார் இயக்குநர் கே.பாலசந்தர். ஆனால், ரஜினியைத் தமிழ்த் திரையின் ஆதார சுருதிகளில் ஒருவராகக் காலம் மாற்றியது நகைமுரண்தான். அப்படத்தில் சில காட்சிகளில் தலையைக் காட்டிவிட்டுச் சென்றுவிடுவார் ரஜினி. பாண்டியன் என்ற அந்தக் கதாபாத்திரத்தின் மனைவி பைரவியாக நடிகை ஸ்ரீவித்யா, ரஜினிக்கு ஜோடியாகியிருப்பார். அப்போது படத்தின் டைட்டிலில் ரஜனி காந்த் என்றுதான் அவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இந்திய சுதந்திர தினமான அன்று வெளியானது போல் அதற்கு அடுத்தும் நான்கு முறை ரஜினி காந்த் நடித்த படங்கள் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகியுள்ளன. அவை, ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘நெற்றிக்கண்’, ‘பாபா’.
மூன்று ஆண்டுகளுக்குள் ரஜினி காந்த் பெரிய நடிகராகிவிட்டார். 1978-ல் காளி என்னும் வேடத்தில் அவரைத் தனது ‘முள்ளும் மலரும்’ படத்தில் நாயகனாக்கினார் இயக்குநர் மகேந்திரன். உமா சந்திரனின் கதையைத் திரைக்கதையாக்கி, இயக்கியிருந்தார் மகேந்திரன். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் முள்ளாக அறிமுகமான ரஜினி காந்த் இந்தப் படத்தில் மலராக மாறியிருந்தார்.
ரஜினிகாந்த் என்னும் நடிகரால் குணச்சித்திர வேடங்களிலும் ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் வெற்றிபெற முடியும் என்பதற்கான தடயங்களை இந்தப் படம் கொண்டிருக்கும். தங்கையிடம் பாசத்தைப் பொழியும் அண்ணனாகவும் அதே நேரத்தில் லா பாயிண்ட் என சரத்பாபுவிடம் முரண்படும் தன்மானமிக்க ஊழியராகவும் குணச்சித்திரம், ஆக்ஷன் என்ற இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாகச் சவாரி செய்திருப்பார் ரஜினி.
ரஜினியுடன் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்த அந்தப் படம் ஆரம்பத்தில் பெரிதாக ரசிகர்களைக் கவராதபோதும் படம் வெளியான சில தினங்களில் சூடு பிடித்தது. படம் பெரிய வெற்றியைப் பெற்றது. வேலையை இழந்தவர்களுக்கு இன்றைக்கு வரை உற்சாகம் தரும் பாடலாக ஆகிப்போனது ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை’ பாடல். காளி போன்ற அழுத்தமான கதாபாத்திரத்துக்குச் சாகாவரம் அளித்திருப்பார் ரஜினி. இளையராஜாவின் இசை, பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு, மகேந்திரன் இயக்கம், நடிகர்களின் பங்களிப்பு எல்லாம் ஒன்றிணைந்து ‘முள்ளும் மலரும்’ படத்தை என்றும் வாடா மலராக்கிவிட்டன.
மீண்டும் 1980 ஆகஸ்ட் 15-ல் இயக்குநர் மகேந்திரன், ரஜினியுடன் கைகோத்து ஒரு படத்தை அளித்தார். அது ‘ஜானி’. இந்தப் படத்தில் நாவிதர் வித்யாசகர், ஜானி என்னும் திருடன் என இரண்டு வேடங்களில் ரஜினி காந்த் நடித்திருந்தார். வித்யாசாகர் செடியில் பூக்கும் பூக்களைக்கூட எண்ணிவிட்டு வெளியே கிளம்பும் அளவுக்கு உஷார் பார்ட்டி. ஜானி யாராவது சிறிது அசந்தால்கூடத் தனது சாதுரியத்தைப் பயன்படுத்தித் திருடும் திறமைசாலி. முதல் காட்சியில் அவர் நகைக்கடையில் நகையையும் பணத்தையும் கொண்டுசெல்லும் காட்சி அதற்கோர் உதாரணம்.
இரண்டு வேடங்களுக்கும் உருவ ஒற்றுமை இருந்தபோதும் அடிப்படையான குணநலன்களில் பல வேறுபாடுகள் தென்படும். ரஜினி- ஸ்ரீதேவிக்கிடையேயான உறவும், ஜானி ரஜினிக்கும் அவருடைய தந்தைக்கு இடையேயான உறவும் புதுவிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். வித்யாசாகரின் காதலியாக வரும் தீபா கதாபாத்திரம், பேராசையின் திருவுருவாக உருவாக்கப்பட்டிருக்கும். ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘என் வானிலே’, ‘ஆசையைக் காத்துல தூது விட்டு’ உள்ளிட்ட இளையராஜாவின் பாடல்கள் இப்போதும் இசை ரசிகர்களின் இதயம் வருடுபவை.
அடுத்த ஆண்டே மீண்டும் சுதந்திர தினத்தில் வந்தார் ரஜினி. இப்போது அவரை இயக்கியவர் அவரது ஆஸ்தான இயக்குநர் எஸ்பி.முத்துராமன். கதை வசனம் எழுதியவர் விசு, திரைக்கதை எழுதி படத்தைத் தயாரித்தவர் அவரது குருநாதர் கே.பாலசந்தர். படம் ‘நெற்றிக்கண்’. இந்தப் படத்தைப் புளியங்குடி அம்மையப்பா தியேட்டரில் பார்த்த நினைவு உள்ளது. ‘ஜானி’யைப் போலவே இதிலும் இரண்டு வேடங்கள் ரஜினிக்கு.
‘ஜானி’யில் அறிமுகமற்ற இருவர் என்றால் இதில் அப்பாவும் மகனும். மீசை நரைத்தபோதும் ஆசை நரைக்காத அப்பாவாக சக்கரவர்த்தி என்னும் வேடம் ஒன்று. இளமை துள்ளியபோதும் சலனமற்று, ஏகபத்தினி விரதன் எனக் கல்லூரி மேடையிலேயே உத்திரவாதம் தரும் சந்தோஷ் எனும் இளைஞன் பாத்திரம் மற்றொன்று. பாலசந்தரின் ஆஸ்தான நடிகையான சரிதாவுக்கு இதில் முக்கியமான பாத்திரம். ரஜினிக்கு ஜோடியாக நடிகை லட்சுமியும் மேனகாவும் நடித்திருப்பார்கள். கண்ணதாசனின் வரிகளில் ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’, ‘மாமனுக்கு காமன் மனசு’ போன்ற பாடல்கள் காலத்தை வென்று காற்றில் வலம் வருபவை.
அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2002-ம் ஆண்டில் சுதந்திர தினத்தன்று ரஜினி ரசிகர்களுக்குக் காட்சி தந்தார். பாபாஜியின் அருள் பெற்ற படமாகச் சொல்லப்பட்ட, ரஜினியின் ஆன்மிக அனுபவமாகக் கருதப்பட்ட ‘பாபா’ திரைக்கு வந்தது. சூப்பர் ஸ்டார் எனத் தன் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினி காந்த் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்திருந்தார். ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்திருந்த சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கியிருந்தார். ரஜினி காந்தைப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாகக் காட்டியிருந்தார் அவர்.
நடந்துவரும்போதெல்லாம் அவரது பாதம் பட்டு அனல் தெறிக்கும். ‘அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ என்று பஞ்ச் வசனமெல்லாம் ரஜினி பேசியும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிருந்தும் ரசிகர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது ‘பாபா’. ரஜினியின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய தோல்விப் படமானது ‘பாபா’. ரஜினிக்குக் கிடைத்த ஆன்மிக அனுபவமே மிச்சமானது.
அதன் பின்னர் சுதந்திர தினத்தன்று எந்தப் படத்தையும் ரஜினி தரவில்லை. இன்று ரஜினி திரையில் அறிமுகமான நாள் என்பதால் சுதந்திர தினமெனும் ஒரே நாளில் வெளியான இந்த ஐந்து படங்களையும் பற்றிய நினைவு மனத்தில் எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT