Published : 15 Aug 2020 02:00 PM
Last Updated : 15 Aug 2020 02:00 PM
இன்று இந்தியத் தேசத்துக்குச் சுதந்திரம் கிடைத்த பொன்னாள் அதோடு உலகப் பிரசித்தி பெற்ற இந்தியத் திரை இசைக் கலைஞரும் ஆஸ்கர் வென்றுள்ள ஒரே தமிழருமான ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்துறையில் இசையமைப்பாளராகத் தடம் பதித்த நாள். 1992 ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'ரோஜா' படம்தான் ரஹ்மான் முதல்முறையாக இசையமைத்த திரைப்படம். இயக்குநராக மணி ரத்னம் தயாரிப்பாளராக கே.பாலசந்தர் என இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிகள் இணைந்த ஒரே படம் என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.
மணி ரத்னம் இயக்கிய படங்களைப் பல காரணங்களுக்காக 'ரோஜா'வுக்கு முன்'ரோஜா'வுக்குப் பின் எனப் பிரிக்கலாம். அதுவரை இளையராஜாவுடன் மட்டுமே பணியாற்றிவந்த மணி ரத்னம் 'ரோஜா'விலிருந்து ஒரு இயக்குநராக ரஹ்மானுடன் மட்டுமே பணியாற்றிவருகிறார். மேலும் குடும்பக் கதைகள், காதல் கதைகள், நிழலுக கதைகளை இயக்கிவந்த மணி ரத்னம் முதல் முறையாக காஷ்மீர் தீவிரவாதம் என்ற தேசிய பிரச்சினையக் கையிலெடுத்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியான 'ரோஜா' இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மணி ரத்னம் படங்களின் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் ஒரு இயக்குநராக அவருடைய பயணத்தின் திசைவழியையும் மாற்றியமைத்த படம் என்றும் அவருடைய படங்களின் செல்வாக்கு, வணிக சாத்தியங்கள் ஆகியவற்றைப் பல மடங்கு விஸ்தரித்த படம் என்று 'ரோஜா'வைச் சொல்லலாம்.
இந்தப் படத்திற்குப் பிறகு மணி ரத்னம் தேசிய அளவில் கவனிக்கப்படும் இயக்குநரானார். அதன் விளைவாக அவருடைய படங்களின் உள்ளடக்கம் தேசிய அளவில் எல்லோராலும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடிய அம்சங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டன. 'இருவர்', 'கடல்' போன்ற தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தான கதைகள் அவ்வப்போது வந்தாலும் 'ரோஜா'வுக்குப் பிறகு மணி ரத்னத்தின் பெரும்பாலான படங்கள் இந்தியில் ஒரே நேரத்தில் மொழிமாற்றம் செய்தோ ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டோ அல்லது தமிழில் வெளியான பிறகு மறு ஆக்கம் செய்யப்பட்டோ வெளியாகக்கூடிய சாத்தியங்களுடனே அமைந்துவருகின்றன. இதனால் மணி ரத்னம் படங்கள் மீதான விமர்சனங்களும் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது. 'ராவணன்', உள்ளிட்ட படங்கள் தமிழிலும் எடுக்கப்பட்டாலும் இந்தி ரசிகர்களுக்கு நெருக்கமாக வடக்கத்தியர்கள் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாகவே எடுக்கப்பட்டிருப்பதாகப் பரவலாக விமர்சிக்கப்பட்டது.
அரசு நிறுவனம் ஒன்றின் உயரதிகாரி ஒருவர் காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த உண்மைச் சம்பவத்தையும் சத்யவான் – சாவித்ரி தொன்மக் கதையையும் இணைத்து 'ரோஜா' படத்துக்கான கதையை உருவாக்கினார் மணி ரத்னம். முதல் முறையாக எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதிய மணி ரத்னம் படம் இதுதான்.
அக்காவைப் பெண் பார்க்க வந்தவர் தன்னைப் பிடித்திருப்பதாகச் சொல்லிவிட குடும்பத்தின் வற்புறுத்தலால் அவரை மணந்துகொள்ளும் கிராமத்துப் பெண் அதன் பிறகு அவருடைய அன்பைப் புரிந்துகொண்டு நேசிக்கத் தொடங்கும்போது காஷ்மீர் தீவிரவாதிகளால் கணவர் கடத்தப்பட்டுவிடுகிறார். பாஷை தெரியாத ஊரில் ஒற்றைப் பெண்ணாக காவல்துறையிடமும் அரசிடமும் போராடி தீவிரவாதிகளிடமிருந்து தன் கணவனை மீட்கும் எளிய பெண்ணின் கதைதான் ரோஜா.
இதை காதல், மென் நகைச்சுவை, தேசப்பற்று சார்ந்த உணர்வுப் பூர்வமான காட்சிகள், ராணுவம்-தீவிரவாதிகள் இடையிலான மோதல் காட்சிகள் என படத்தின் திரைக்கதையைச் சுவாரஸ்யமாக்கின. அதே நேரம் சுதந்திர நாட்டில் சாமான்ய மக்களின் பாதுகாப்புக்கு எப்போதும் நிலவும் அச்சுறுத்தலை பிரச்சார தொனி இன்றி அழுத்தமாக உணரச் செய்த படைப்பாக இருந்ததும் 'ரோஜா'வின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம்.
தேசியக் கொடியை தீவிராவதிகள் எரிக்க முயல்வதும் அந்த நெருப்பில் புரண்டு நாயகன் தேசியக் கொடியின் மரியாதையைக் காப்பாற்றுவதுமான காட்சி தேசப்பற்று சார்ந்த மிகை உணர்ச்சி சார்ந்த சித்தரிப்பு என்றாலும் திரைப்படக் காட்சியாக பெரும்பாலான இந்தியர்களை அது பெரிதும் ஈர்த்தது. ஆகையால் அது தமிழ் வெகுஜன சினிமாவின் காவியத்தன்மை வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. அந்தக் காட்சியின் பின்னணியில் ஒலித்த 'நவபாரதம் உருவானது' பாடலும் அந்தக் காட்சியை உணர்வுபுர்வமான உச்சத்துக்கு எடுத்துச் சென்றது.
ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருந்தது. முதல் படத்துக்கே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற அரிய சாதனையைப் படைத்தார் ரஹ்மான். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ், முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மதுபாலா, அரவிந்த்சுவாமி, பங்கஜ் கபூர், துணைக் கதாபாத்திரங்களில் நடித்த ஜனகராஜ். நாசர் உள்ளிட்ட அனைவரும் வெகு சிறப்பாகப் பங்களித்திருந்தனர்.
'ரோஜா' படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தது. தமிழக அரசு விருதுகளில் ஐந்து பிரிவுகளில் விருதை வென்றது. இந்தத் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார். கடந்த 28 ஆண்டுகளில் ஆஸ்கர் விருது உட்பட உலக அளவில் பல சாதனைகளைப் படைத்ததோடு தொடர்ந்து தமிழ்த் திரையுலகிலும் பாலிவுட்டிலும் சர்வதேச திரைப்படங்களிலும் வெற்றிகரமான இசையமைப்பாளராகத் திகழ்கிறார்.
இப்படி ஒரு படமாக பல சாதனைகளை நிகழ்த்தியதோடு தொடர்புடைய கலைஞர்களின் வாழ்விலும் பெரும் தாக்கம் செலுத்திய 'ரோஜா' 28 ஆண்டுகள் அல்ல இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பசுமையுடனும் பெருமையுடனும் நினைவுகூரப்பட வேண்டிய படமாகவே நீடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் ரசிகர்கள் மனங்களில் என்றுமே வாடாத மலர் தான் இந்த 'ரோஜா'.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT