Published : 14 Aug 2020 04:07 PM
Last Updated : 14 Aug 2020 04:07 PM

தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள், மனவேதனையாக இருக்கிறது: யோகி பாபு வேண்டுகோள்

சென்னை

தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள் மனவேதனையாக இருக்கிறது என்று யோகி பாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு தான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படத்தில் கூட, நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்துவதாக யோகி பாபு வேதனை தெரிவித்தார். இதனால் தனது இதர படங்கள் பாதிக்கப்படுவதாகவும், இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என வேண்டுகோளும் விடுத்தார்.

ஆனால், தொடர்ச்சியாக இது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் ரைட் ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள படம் 'தெளலத்'. ஷக்தி சிவன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ராஷ்மி கெளதம், ஜெயபாலன், ஐசக், வைரவன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது.

'தெளலத்' போஸ்டர் யோகி பாபு மட்டும் தனியாக இருப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டது படக்குழு. இது தொடர்பாக தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார் யோகி பாபு. தற்போது தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு கூறியிருப்பதாவது:

"சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.

எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் வாங்கியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.

"அண்ணா, முழுமையாக இருப்பீர்கள் என நம்பி திரையரங்கிற்குச் சென்றோம். ஆனால், 2 - 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள். என்ன அண்ணா இது" என்று சில ரசிகர்கள் தொலைபேசி வாயிலாகக் கேட்டார்கள். இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே 'தெளலத்' என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.

என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்"

இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x