Published : 13 Aug 2020 05:44 PM
Last Updated : 13 Aug 2020 05:44 PM
இணையத்தில் எழுந்த கலாய்ப்பு சர்ச்சை தொடர்பான கேள்விக்கு ஹிப் ஹாப் ஆதி பதிலளித்துள்ளார்.
'ஹிப் ஹாப் தமிழன்' ஆல்பத்துக்குப் பிறகு, 'நான் ஒரு ஏலியன்' என்ற புதிய ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின வெளியீடாக யூடியூப் தளத்தில் இந்த ஆல்பம் வெளியாகவுள்ளது. இதிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'நான் ஒரு ஏலியன்' ஆல்பத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியொன்று அளித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி. அதில் சமீபத்தில் 'அகாடமி விருதுகள்' என்ற நிகழ்ச்சியில் ஜெகன் கிருஷ்ணன், ஹிப் ஹாப் ஆதியின் பாடல்களைக் கலாய்த்திருந்தார். இந்தக் கலாய்ப்பு பெரும் சர்ச்சையாக சமூக வலைதளத்தில் உருவெடுத்தது.
இதற்கு ஹிப் ஹாப் ஆதி மறைமுகமாகப் பதிலளித்தாலும், நேரடியாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "ஜெகன் கிருஷ்ணன் கலாய்ப்பு" குறித்த கேள்விக்கு, எனது சமீபத்திய பாடல்களே விமர்சகர்களுக்கான தனது பதில் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிப் ஹாப் ஆதி கூறியிருப்பதாவது:
"என் சமீபத்திய பாடல்களே விமர்சகர்களுக்கான என் பதில். மெய் நிகர் உலகில் தங்களைப் பற்றி அதிக முக்கியத்துவத்தோடு நினைப்பதால்தான் சிலர் கவனம் இழக்கின்றனர் என்று நினைக்கிறேன். சுஷாந்த் சிங்கின் தற்கொலை பற்றி வருத்தமாகப் பதிவிட்டு, அடுத்த நிமிடம் ஒருவரைக் கிண்டல் செய்யும் மக்கள் நம்மிடையே இருக்கின்றனர்.
உங்களை நீங்கள் ஒரு மூன்றாம் நபர் போல பார்த்து, நீங்கள் செய்வதைக் கவனித்தால் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்பதற்கான விடை கிடைக்கும். கொஞ்சம் அன்பைப் பரப்புங்கள். ஒரு அழகான வட்டத்தில் அது மீண்டும் உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்".
இவ்வாறு ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT