Published : 12 Aug 2020 08:09 AM
Last Updated : 12 Aug 2020 08:09 AM
ராசிபுரத்தைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி நேற்று காலை உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பி.கே.முத்துசாமி (100). இவரது மனைவி பாவாயியம்மாள் மற்றும் ஒரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தனர். மற்றொரு மகன், மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
பாடலாசிரியர் முத்துசாமி சொந்த ஊரான புதுப்பட்டியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அதே கிராமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 1958-ம் ஆண்டு ஏ.கே.வேலன் தயாரிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான தைப்பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படத்தில் மண்ணுக்கு மரம் பாரமா... மரத்திற்கு இலை பாரமா...பெற்றெடுத்த குழந்தை தாய்க்குபாரமா என்ற பாடலை எழுதியுள்ளார். இந்தப்பாடல் அப்போதுபட்டிதொட்டி எல்லாம் முணுமுணுக்கப்பட்டதுடன் தற்போது வரையும் பேசப்பட்டு வருகிறது.
இதுபோல் காவேரியின் கணவன் படத்தில் மாப்பிளை வந்தார் மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே என்ற பாடலும், அதே படத்தில் சின்ன சின்ன நடை நடந்து... செம்பவள வாய் திறந்து போன்ற பாடல்களை எழுதியுள்ளார். மேலும், அறிஞர் அண்ணா அறுபது, பெரியார் புரட்சிக் காப்பியம், புரட்சி தலைவனின் புரட்சிக் காப்பியம் ஆகிய புத்தகங்கள், 15 வெண்பாக்களை எழுதியுள்ளார். மறைந்த பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி 1920-ம்ஆண்டு பிறந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT