Published : 10 Aug 2020 07:02 PM
Last Updated : 10 Aug 2020 07:02 PM
சத்யன் மகாலிங்கத்தின் தொடர் உதவியைப் பாராட்டும் விதமாக நாளை மேடை மெல்லிசைக் கலைஞர்கள் முகநூலில் ஒன்றுகூட உள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தலால் பல்வேறு பணிகளில் உள்ள தினசரித் தொழிலாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதில் இசைக் கலைஞர்களும் அடங்குவர். அவர்களுக்கு உதவும் வகையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக முகநூல் வாயிலாகத் தினந்தோறும் பாடி வருகின்றார் சத்யன் மகாலிங்கம். 'விழித்திரு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பல்வேறு தென்னிந்திய மொழிப் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். சில பாடல்களையும் பாடியுள்ளார்.
அதன் மூலமாக வசூலாகும் நன்கொடைகளை தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் தமிழ்நாடு மேடை மெல்லிசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்குச் செல்லும் வகையில் அளித்து, அவர்கள் மூலமாக சென்னையில் உள்ள பெரும்பான்மையான இசைக் கலைஞர்களுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூபாய் 1000/ - செலுத்த உதவியுள்ளார். இந்த வகையில் இதுவரை 16 லட்சம் ரூபாய் இவர் திரட்டிய நிதியிலிருந்து இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, மாவட்டந்தோறும் உள்ள இசைக் குழுக்களுக்கு முகநூல் வாயிலாகத் தினமும் இசை நிகழ்ச்சி நடத்த வாய்ப்பினை அளித்துள்ளார். அந்த இசைக்குழுவிற்கு 22 ஆயிரம் ரூபாய் மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளன்று வரும் நன்கொடையையும் நேரடியாக அவரவர்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் வகையில் ஏற்பாடு செய்து, பல இசைக் குடும்பங்களுக்கு உதவியுள்ளார். தனி மனிதனாக இவர் பாடி இதுவரை 20 லட்சத்திற்கு மேல் நன்கொடை நிதி வசூலித்து சாதனை படைத்து உதவியுள்ளார்.
இதற்கும் மேலாக சென்னையில் உள்ள இசைக் கலைஞர்களின் இரண்டு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையிலும் மற்றும் +2 தேர்வில் 85% அதிகமான மதிப்பெண்கள் எடுத்த இசைக் கலைஞர்களின் குழந்தைகளுக்கும் உதவ உள்ளார். அதற்கான கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது.
அண்ணா நகர் விமலம் மெஸ், சிங்கப்பூர் அப்பலோ செல்லப்பாஸ் மற்றும் சிங்கப்பூர் பனானா லீப் ரெஸ்டாரன்ட், ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவரின் இத்தகைய சாதனைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்
சத்யன் மகாலிங்கத்தின் சாதனையைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மேடை மெல்லிசைக் கலைஞர்கள் ஒன்று கூடி இவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் விதமாக முகநூலில் இவரின் 100-வது நாள் நிகழ்ச்சியினை நாளை (ஆகஸ்ட் 11) வெகு சிறப்பாகக் கொண்டாட உள்ளார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT