Published : 10 Aug 2020 05:56 PM
Last Updated : 10 Aug 2020 05:56 PM
'ப்ளாக் ஐட் பீஸ்' எனும் அமெரிக்க ராப் இசைக் குழு, 'எந்திரன்', 'ஆம்பள' உள்ளிட்ட திரைப்படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து அதைத் தனது இசைக் காணொலியில் பயன்படுத்தியுள்ளது.
'ப்ளாக் ஐட் பீஸ்' என்ற இசைக் குழுவைச் சேர்ந்தவர் வில்லியம். இந்தக் குழு ஏற்கெனவே 'டான்', 'அப்ராத்', 'ஸ்ரீ ராகவேந்திரா' உள்ளிட்ட இந்தியத் திரைப்படங்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்து வெற்றி கண்டது.
தற்போது 'ஆக்ஷன்' என்ற பாடலை இந்த இசைக் குழு வெளியிட்டுள்ளது. இதற்கான காணொலியில் 'மர்யாத ராமண்ணா (தெலுங்கு)', 'எந்திரன்', 'ஆம்பள', 'சிங்கம் (இந்தி)', 'காப்ஸ் (ஸ்பானிஷ்)' ஆகிய திரைப்படக் காட்சிகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்தக் காட்சிகளில் நாயகர்களுக்குப் பதிலாக, டீப் ஃபேக் (deep fake) என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இந்த இசைக் குழுவைச் சேர்ந்தவர்களின் முகங்கள் மாற்றி வைக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் இந்தப் பாடலைப் பற்றிப் பகிர்ந்துள்ள இந்த இசைக் குழுவின் வில்லியம் என்ற பாடகர், "பாலிவுட்டின் தாக்கத்தில் உருவான ஆக்ஷன் காணொலியைப் பாருங்கள். இந்தியாவின் இசையை நான் என்றைக்குமே விரும்பியிருக்கிறேன். 'மன்கி பிஸினஸ்', 'எலிஃபங்' உள்ளிட்ட பாடல்கள் இந்தியக் கலாச்சாரத்தின் தாக்கத்தில் உருவானவை. உலகுக்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி இந்தியா" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்திருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "கலையால் எல்லைக் கோடுகள் மங்குகிறது" என்று வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் ஷங்கரை இதில் டேக் செய்துள்ளார்.
வழக்கமாக மீம்களில் கலாய்க்கப்படும், பிரபலமான சண்டைக் காட்சிகளைத் தொகுத்தே இந்தக் காணொலி உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பவரைச் சிரிக்க வைக்கும் இந்தக் காணொலிக்குப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
The borders are blurring through art!#tamilcinema @directorshankar #rajnikant #india https://t.co/kbED926VqH
— A.R.Rahman (@arrahman) August 9, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT