Published : 10 Aug 2020 01:04 PM
Last Updated : 10 Aug 2020 01:04 PM
கரோனா பாதிப்புக்கு நடுவே நம்பிக்கை ஒளிக்கீற்றுக்காக மனித இனம் காத்திருக்கும் சூழலில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ‘தி ரெய்ன்’ தொடரின் இறுதி சீஸன், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
2018-ல் இத்தொடரின் முதல் சீஸன் வெளியானது. டேனிஷ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் இத்தொடரில் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலான ஊடாட்டமாகக் கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது. இந்தக் கதை சொல்லல் பாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதேசமயம், இதுவரை வெளியான இரண்டு சீஸன்களும் பெறாத வரவேற்பை இறுதி சீஸன் பெற்றுள்ளது. இத்தொடர் முழுக்க முழுக்க வைரஸ் பரவலைப் பற்றியது என்பதுதான் இந்த எதிர்பார்ப்புக்கு மூல காரணம்.
பதுங்குக் குழியில் ஆறு ஆண்டுகள்
ஸ்காண்டினேவியா பகுதியில் பொழியும் மழையின் மூலமாகக் கொடிய வைரஸ் பரவப் போகிறது எனும் தகவலை முன்கூட்டியே அறிந்துகொள்வார் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆண்டர்ஸன். இதையடுத்து, தான் பணிபுரியும் நிறுவனத்துக்குச் சொந்தமான பதுங்குக் குழியில் தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக மறைத்துவைக்க முயல்வார். அடிப்படை வசதிகள் நிறைந்த அந்தப் பதுங்குக் குழியில் தனது மகள் சிமோனே, மகன் ராஸ்முஸ் ஆகிய இருவருடன் தன் மனைவியைப் பாதுகாப்புக்கு விட்டுவிட்டு வைரஸுக்கான தீர்வைத் தேடி கவச உடையுடன் கிளம்பிச் செல்வார். எனினும், தவிர்க்கமுடியாத சூழலால் அவரது மனைவி பதுங்குக் குழியைவிட்டு வெளியேறுவார். அப்போது எதிர்பாராத விதமாகத் தன் பிள்ளைகள் முன்னிலையிலேயே அப்பெண் மரணமடைவார்.
இதனால், சிமோனேயும் ராஸ்முஸ்ஸும் கையறு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். என்ன நடந்தாலும் தன்னுடைய தம்பியைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தன் தந்தை தன்னிடம் சொல்லிவிட்டுப் போனதை வேதவாக்காகக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பாள் சிமோனே. தந்தையின் வருகையை எதிர்பார்த்து அந்தப் பதுங்குக் குழியிலேயே வாழ்க்கையைக் கழிப்பார்கள் இருவரும். ஆறு வருடங்கள் கழித்து அவர்கள் அந்தப் பதுங்குக் குழியை விட்டு வெளியேறுவார்கள். உயிர் பிழைத்திருக்கும் சிலருடன் இணைந்து தங்கள் தந்தையைத் தேடி பயணத்தைத் தொடங்குவார்கள்.
நம்பிக்கையின் தொடக்கப் புள்ளி
இதற்கிடையே, உயிர் பிழைத்திருக்கும் சிலரையும் நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக ஒரு கூட்டம் வேட்டையாடி வரும். இத்தனை அபாயங்களுக்கு நடுவே அக்கா, தம்பி இருவரும் தங்கள் தந்தையைத் தேடிக் கண்டுபிடித்தார்களா, வைரஸுக்கான தீர்வு கிடைத்ததா என்பதை 20 எபிசோடுகளில் பரபரப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது கரோனா வைரஸ் மீதான பயத்துடன் இருக்கும் மக்கள் மத்தியில் இத்தொடர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியமில்லை. எப்பேர்ப்பட்ட வைரஸாக இருந்தாலும் அன்பும், நம்பிக்கையும், சக மனிதர்கள் மேல் கரிசனையும் இருந்தால் மனித இனம் மீண்டும் புத்துயிர் கொண்டு எழும் என்பதில் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கையை ஆழமாக விதைக்கிறது ‘தி ரெய்ன்’ தொடர்!
- க.விக்னேஷ்வரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT