Published : 07 Aug 2020 04:35 PM
Last Updated : 07 Aug 2020 04:35 PM
ஆஸ்கார் மூவிஸ் M.பாஸ்கர் M.A. தயாரித்து கதை, திரைக்கதை எழுதி இயக்கிய படம் ‘சூலம்’. வசனம் மதுரை தங்கம். இந்தப் படத்தில்தான் வைரமுத்து பாடலாசிரியராக முதல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இந்தப் படத்தின், ‘பெண்ணின் மானம் காக்கும் சூலம்…’, ‘பூனைக்கண்ணி ஜூலி…’ என்னும் இரண்டு பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். திரைத்துறைக்கு வைரமுத்துவை அறிமுகப்படுத்தியவர் பாஸ்கர்தான். ஆனால், இந்தப் படம் வெளிவரும் முன்னரே அவர் பாடலெழுதிய ‘நிழல்கள்’ படம் வெளியாகிவிட்டது. ஆக, வைரமுத்துவின் முதல் படம் ‘நிழல்கள்’ என்றாகிவிட்டது.
ராதிகா, ராஜ்குமார், சுதிர், புஷ்பலதா, தேங்காய் சீனிவாசன், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இது. ‘சூல’த்தின் ஒருவரிக் கதை என்று பார்த்தால், வீரமான பெண் ஒருத்தியின் ஞானமிகு மானப் போராட்டம் என்று சொல்லலாம். தன்மானம் மிக்க பெண் ஒருத்தியைக் குடும்ப கௌரவத்தையும் அந்தஸ்தையும் உயர்வாக நினைக்கும் இளைஞன் ஒருவன் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான். தனக்கு ஏற்பட்ட அந்த மோசமான சம்பவத்தை அந்தப் பெண் எப்படிக் கையாளுகிறாள் என்பதே திரைக்கதையாக விரிந்திருக்கிறது.
மகாலட்சுமி மில் அதிபர் மகாலட்சுமி அம்மா மில் தொழிலாளர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். அவருடைய மகன் அமெரிக்காவில் படித்துவிட்டு வரும் சின்னதுரை. அவருக்கோ பணமும் கௌரவமும்தாம் பெரிது. தொழிலாளர்களைவிட மில்லே அவருக்கு முதன்மையானது. அந்த மில் அருகே உணவுக் கடை நடத்திவருகிறார் அன்னம்மா. அவள் தன்மானமிக்க குப்பத்துப் பெண். பர்மாவிலிருந்து வந்தவள். அவள் என்ன சொன்னாலும் குப்பத்து ஜனங்கள் கேட்பார்கள். அந்த அளவுக்கு அவளுக்கு அங்கே செல்வாக்கு.
அமெரிக்காவிலிருந்து திரும்பிய சின்னதுரை குப்பத்து மக்களின் குடியிருப்பு அமைந்திருக்கும் இடத்தில் மில் ஒன்றை நிறுவத் துடிக்கிறான். இதற்கு மறுப்பும் எதிர்ப்பும் தெரிவிக்கிறாள் அன்னம்மா. பணத்துக்கும் அவள் மசியவில்லை. தங்களது குடிசைகளை எரிக்க வந்த சின்னதுரை அனுப்பிய ஆட்களையும் குப்பத்து ஜனங்கள் விரட்டி அடித்துவிடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து சின்னதுரையின் கொடும்பாவியை எரிக்க ஆத்திரமடைந்த சின்னதுரை அதற்குப் பழிவாங்க நினைத்து அன்னம்மாவைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகிறான்.
சின்னதுரை கையாலேயே தனக்குத் தாலி கட்டவைப்பதாகச் சவால் விடுகிறாள் அன்னம்மா. சின்னதுரையின் காதலியான ரீட்டா எனும் நடனக்காரி ஹோட்டலில் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். அந்தப் பழி அன்னம்மா மீது விழுகிறது. அவள் கொலைப் பழியிலிருந்து மீண்டாளா, சின்னதுரையிடம் இட்ட சவாலில் வெற்றிபெற்றாளா என்பதுதான் திரைக்கதையின் எஞ்சிய பயணம்.
படத்தில் அன்னம்மாவுக்கு ஆதரவாக, உடன் பிறக்காத அண்ணனாக இருப்பவன் பீட்டர் (சுதிர்). பீட்டர் ஒரு தொழுநோயாளி. மருத்துவமனையில் அன்னம்மாவுக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அவன் அனைவருக்கும் பிரியத்துடன் சாக்லேட் வழங்குகிறான். ஆனால், அவனது தொழுநோய் பாதிப்பு கண்ட கையைப் பார்த்த ஒருவரும் அவனிடம் சாக்லேட் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அவனிடம் அன்னம்மா மாத்திரம் பிரியத்துடன் சாக்லேட்டைப் பெற்று, ‘உங்க மனசு மாதிரி ரொம்ப இனிப்பா இருக்கு அண்ணன்’ என்று சொல்லிச் சுவைக்கிறாள். தொழுநோய் என்பது தொற்று நோயல்ல என்பதை வசனமாகச் சொல்லாமல் காட்சியாகச் சொல்லிய விதத்தில் ‘சூலம்’ நிமிர்ந்து நிற்கிறது. வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் தொழுநோயாளிகளை இவ்வளவு நேர்மறைத் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?
திரைக்கதையின் அடுத்த பகுதி உடுப்பியில் நிகழ்கிறது. அங்கேயும் சின்னதுரை மில் ஒன்றை நிறுவ முயல்கிறான். ஆனால், அங்கே எஸ்டேட் அதிபராக இருக்கும் ஜூலி என்னும் பெண் அவனது நினைப்புக்கு இடைஞ்சலாக இருக்கிறாள். அந்த ஊரில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காமுகன் ஒருவன் அப்பாவிப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினான். அவனை மாறு கை மாறு கால் வாங்க பஞ்சாயத்து முடிவுசெய்து நிறைவேற்றியது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மாறு கை மாறு கால் விழா எடுப்பது அவர்களது வழக்கம்.
ஜூலியின் கொட்டத்தை அடக்க அவள் நடத்தும் மீன்பிடித் தொழிலில் சின்னதுரையும் ஈடுபடுகிறான். அன்னம்மாவுக்கு அவன் செய்த துரோகத்துக்குப் பழிவாங்குவது போல் ஜூலி ஒவ்வொன்றாக நிகழ்த்துகிறாள். இறுதியில் தன்னை அவன் பாலியல் வல்லுறவுசெய்துவிட்டதாகவும் பழி போடுகிறாள். அவளைப் பழிவாங்க சின்னதுரை அவளைக் கொல்ல முயல்கிறான். அப்போது அவன் புதை மணலில் விழுந்துவிடுகிறான். தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உடுத்தியிருந்த உடையைக் கழற்றி, கயிறாக்கி அவனைக் காப்பாற்றுகிறாள் ஜூலி. அன்னம்மாவின் மானம்போகக் காரணமாக இருந்த சின்னதுரையைத் தனது மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் காப்பாற்றுகிறாள் ஜூலி. இப்போது ஜூலி தான் யாரெனச் சொல்கிறாள். என்றபோதும் அவளை சின்னதுரை திருமணம் செய்துகொள்கிறான்.
ராதிகாவுக்குக் கிடைத்த வேடத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் பெரிய குறை என்றால் நாயகனாக நடித்த, நடிகை லதாவுடைய தம்பியான ராஜ்குமார்தான். ஏனோ அவர் அந்தக் கதாபாத்திரத்தில் ஒட்டவேயில்லை. ஒரு செல்வந்தனுக்குரிய தோற்றம் இருந்தபோதும் அவரிடம் ஓர் அந்நியத்தன்மை வெளிப்படுகிறது. இந்த வேடத்தில் முதலில் நடிகர் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமாவதாக இருந்திருக்கிறது.
இதன் பின்னர் வெளியான ‘விதி’, ‘புதியபாதை’, ‘வள்ளி’ போன்ற படங்களில் பாலியல் வல்லுறவுக்காளான பெண்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருந்தது. ‘சூலம்’ அதற்கெல்லாம் முன்னோடிப் படம். படத்தின் நாயகிப் பாத்திரம்தான் கனமானது. நாயகனுக்குப் பெரிய பங்கில்லை. இப்போது படத்தைப் பார்க்கும்போது, பாலியல் வல்லுறவுக்கு ஆளான நாயகி தற்கொலை செய்துகொள்ளவில்லையே தவிர அவள் பாலியல் வல்லுறவுசெய்தவனையே அடைவேன் எனப் போராடுவதும் ஒரு பிற்போக்குத்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால், அந்தப் பாத்திரம் மரபுக்கு உட்பட்டு முற்போக்கை வெளிப்படுத்தும் வகையிலேயே இயக்குநர் பாஸ்கர் அதை உருவாக்கியிருக்கிறார்.
தனது ‘பைரவி’ திரைப்படத்தில் நாயக அம்சம் தூக்கலாக இருந்தது என்றால் தான் தயாரித்த முதல் படமான இதில் இயக்குநர் பாஸ்கர் நாயகியை முதன்மையாக்கியிருந்தார். இந்தப் படத்தில்தான், விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தை இயக்கிய செந்தில்நாதன் உதவி இயக்குநராக அறிமுகமானார். செந்தில்நாதன்தான் சரத்குமாரை நாயகனாக்கியவர். தயாரிப்பாளர் கே. ராஜன் ‘சூலம்’ திரைப்படத்தில் ஊர்த் தலைவராக நடித்திருக்கிறார்.
திரைக்கதையை நேர்த்தியாக அமைத்திருக்கிறார் பாஸ்கர். எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் அப்படியே நூல் பிடித்ததுபோல் உள்ளது திரைக்கதை. ஆனால், சின்னதுரைக்கு ஜூலி யாரென்பதுகூடத் தெரியவில்லை என்பதை நம்ப இயலவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட அதே நேரத்தில் வழக்கமான பாதையிலிருந்து சற்று விலகிப் பயணப்படும் படம் ‘சூலம்’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT