Published : 07 Aug 2020 12:09 PM
Last Updated : 07 Aug 2020 12:09 PM
இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதும் தேசிய அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிக்கினர்.
தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களையும் நடத்தினர். அப்படி சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரை தனி விமானம் மூலமாகவும் சோனு சூட் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் வறுமை காரணமாகத் தன் சொந்த மகள்களை ஏரில் பூட்டி நிலத்தில் உழுத விவசாயி ஒருவருக்கு தனது சொந்தச் செலவில் டிராக்டர் பரிசளித்தார் சோனு சூட்.
இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.
இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ட்விட்டரில் தன்னிடம் ப்ளேஸ்டேஷன் - 4 வீடியோ கேம் வாங்கித் தரும்படி கேட்ட சிறுவனுக்கு சுவாரசியமான அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார் சோனு சூட்.
சோனுவின் ட்விட்டர் பக்கத்தில் நிலேஷ் என்ற சிறுவன், ''தயவுசெய்து எனக்கு ஒரு பிஎஸ் 4 வாங்கித் தரமுடியுமா? ஊரடங்கில் என்னைச் சுற்றியுள்ள சிறுவர்கள் எல்லாம் வீடியோ கேம் விளையாடி மகிழ்கின்றனர். எனக்கு தயவுசெய்து உதவி செய்யவும்'' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சோனு சூட், ''உங்களிடம் பிஎஸ் 4 இல்லையென்றால் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். நான் அதற்கு உங்களுக்கு உதவுகிறேன்'' என்று அறிவுரை கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT