Published : 06 Aug 2020 07:09 PM
Last Updated : 06 Aug 2020 07:09 PM

விபத்து நடக்காமல் இருக்க ஏற்பாடுகள்: ஷங்கர் உறுதி

சென்னை

இனி விபத்து நடக்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று ஷங்கர் உறுதிப்படத் தெரிவித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பிப்ரவரி 19-ம் தேதி இரவு கோர விபத்து நடைபெற்றது. இதில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்தார்கள். ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததே காரணம் என கூறப்பட்டது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 6) மாலை 'இந்தியன் 2' விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

"உயிரிழந்த எனது உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை இயக்குநரிடம் உதவியாளராக இருந்த சந்திரன், தயாரிப்பு ஒருங்கிணைப்பில் உதவியாளராக இருந்த மது ஆகியோரின் குடும்பங்களுக்கு மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அது அனைத்தையும் செய்வோம் என உறுதி கூறுகிறேன்"

இவ்வாறு இயக்குநர் ஷங்கர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x