Published : 06 Aug 2020 02:43 PM
Last Updated : 06 Aug 2020 02:43 PM
சிவாஜியின் பெயரைச் சொல்லாமலே, அவர் நடித்த கேரக்டர்களின் பெயர்களைச் சொல்லி, அந்தப் படங்களின் மொத்தக் கதையையுமே சொல்லிவிடுவோம். அப்படியாக, சிவாஜிக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் ஏராளம். அவற்றில், மிக மிக முக்கியமானதொரு இடத்தை மக்களின் மனங்களின் பிடித்த கேரக்டர்கள்... பிரஸ்டீஜ் பத்மநாபன், பூண்டி மாதாக்கோயில் ஆன்டனி,பாரீஸ்டர் ரஜினிகாந்த். முதலாவது ‘வியட்நாம் வீடு’. அடுத்தது... ‘ஞானஒளி’. மூன்றாவது... ‘கெளரவம்’.
இந்தக் கேரக்டர்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜிகணேசன். கேரக்டர்களை உருவாக்கியவர்... சுந்தரம். வியட்நாம் வீடு சுந்தரம்.
திருச்சிதான் பூர்வீகம். சென்னைக்கு வந்த சுந்தரம், டன்லப் டயர் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். அதேசமயம், எழுத்திலும் ஆர்வம் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதினார். அப்போது சினிமாவை விட நாடகத்தின் மீதுதான் எல்லோருக்குமே மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. சுந்தரம் நாடகத்துக்காக கதை ஒன்றை எழுதினார். 62ம் ஆண்டு அரங்கேறிய அந்த நாடகத்துக்கு வந்தவர் எம்ஜிஆர். ‘இந்தக் கதையை எழுதிய பையன், பின்னாளில் பெரியாளாக வரப்போகிறான்’ என்று சொல்லி வாழ்த்தினார்.
டயர் போலவே, வாழ்க்கைச் சக்கரமும் சுழன்றது. ஒருபக்கம் வேலை... இன்னொரு பக்கம் எழுத்து என்று ஓடிக்கொண்டிருந்தார் சுந்தரம். இந்த முறையும் நாடகத்தைக் கருத்தில் வைத்து, கதையை எழுதினார். அந்தக் கதையை எழுதி, ஒய்.ஜி.பார்த்தசாரதியிடம் கொடுத்தார். படித்துப் பார்த்த ஒய்.ஜி.பி., ‘யோவ், இந்தக் கதை பிரமாதமா இருக்குய்யா. ஆனா எங்க ட்ரூப்புக்கு பொருந்துறதை விட, இதுல சிவாஜி கணேசன் நடிச்சாத்தான்யா பொருத்தமா இருக்கும். முயற்சி பண்ணிப்பாரேன்’ என்று, வாசலைக் காட்டினார். ஆனால் வழி? சிவாஜியை நெருங்கும் வழி தெரியாது கைபிசைந்து தவித்தார் சுந்தரம்.
‘’அது 65ம் வருஷம். அதுக்குப் பிறகுதான் என்னென்னவோ நடந்துச்சு. என் சகோதரிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். அவளுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அந்தக் கதையை அவங்களோட பக்கத்துவீட்டு மாமிகிட்ட சொல்லிருக்கா. அந்த மாமியை கதை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிருச்சு. மாமி அவங்க வீட்டுக்காரர்கிட்ட கதையைச் சொல்லி, விவரத்தைச் சொல்லிருக்காங்க. அவர் என்னடான்னா... சிவாஜி அண்ணாகிட்ட இந்தக் கதையைச் சொன்னார். அவர், சிவாஜி அண்ணாவோட ஆடிட்டர். ‘அந்தப் பையனை வரச் சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டார் சிவாஜி. அங்கேருந்துதான் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் அல்ல... வாழ்க்கையே ஆரம்பிச்சுது’’ என்று ஒருமுறை சுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கேயொரு சோகம்... சிவாஜியைப் பார்க்கச் செல்லவேண்டும். ஆனால் போட்டுக்கொள்ள டயர் கம்பெனி சீருடையைத் தவிர வேறேதுமில்லை. நண்பரிடம் இருந்து இரவல் சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டு சிவாஜியைச் சந்தித்தார். கதையைச் சொன்னார். ‘என்னோடயே இரு. கதையை டெவலப் பண்ணு’ என்றார் சிவாஜி.
சிவாஜி போகும் இடங்களுக்கெல்லாம் நிழல் போல் பின் தொடர்ந்தார் சுந்தரம். சூரக்கோட்டைக்கும் சென்று கதைகளை விரிவாக்கினார். முழு உருவமும் வடிவமும் பெற்றது. நாடகமும் அரங்கேறியது. அந்த நாடகத்தில் சிவாஜிதான் நடித்தார். முதல் நாள் டிராமாவைப் பார்த்துவிட்டு கூட்டம் வியந்தது. அடுத்த நாள்... இன்னும் கூட்டம் அள்ளியது. நாடக இடைவேளையில், சிவாஜியின் முகம் மறைக்கும் அளவுக்கு மாலைகள் விழுந்தன. அத்தனை மாலைகளையும் எடுத்து சுந்தரத்தின் தோள்களில் போட்டார். ‘இந்தக் கதையை எழுதியது இவன் தான். இவன் பெயர் சுந்தரம். இனிமேல் இவன் வியட்நாம் வீடு சுந்தரம் என்றாகிவிட்டான்’ என்றார் சிவாஜி.
அன்று முதல் அவர் வியட்நாம் வீடு சுந்தரமானார். அந்த நாடகம்... ‘வியட்நாம் வீடு’. நாடகம் அரங்கேறாத ஊரில்லை; மேடையில்லை. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தில், பிரஸ்டீஸ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டியிருந்தார் சிவாஜி. பிறகு ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ என்கிற தன்னுடைய கம்பெனி பேனரில், இந்தக் கதையை சினிமாவாக்கினார் சிவாஜி. பி.மாதவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சக்கைப்போடு போட்டது. பிராமணக் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்த முழுப்படம் இதுதான்!
இதையடுத்து, இன்னொரு கதையை எழுதினார். அதை நாடக வடிவமாக விரிவாக்கினார். இந்த முறை மேஜர் சுந்தர்ராஜன் மேடையேறினார். இதுவும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இதேபோல், ‘எங்களுக்கு ஒரு கதை பண்ணுய்யா’ என்றார் ஒய்.ஜி.பார்த்தசாரதி. அவருக்கும் கதை தயார் செய்து கொடுத்தார். அதுவும் நாடகமாக மேடையேறியது. வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய இந்த இரண்டு நாடகங்களையும் பார்க்க வந்தார் சிவாஜி. மேஜர் நடித்த அந்த நாடகம் அந்தப் பெயரிலேயே திரைப்படமாக வந்தது. படத்தின் பெயர்... ‘ஞான ஒளி’. இதையும் பி.மாதவன் இயக்கினார். மாதாக்கோயிலில் மணியடிக்கும் ஆன்டனியாக, சிவாஜி நடிப்பால் தேவாலயம் போலவே உயர்ந்திருந்தார். ஒய்.ஜி.பி.க்காக வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய அந்தக் கதையும் படமாக்கப்பட்டது. ‘கண்ணன் வந்தான்’ எனும் தலைப்பில் வந்த நாடகம் சினிமாவாகும் போது வேறொரு பெயர் சூட்டப்பட்டது. அது ‘கெளரவம்’. ‘நீயே தயாரிச்சிருடா சுந்தரம்’ என்றார் சிவாஜி. ’ ‘தி இந்து’ ரங்கராஜனுடன் இணைந்து தயாரித்த வியட்நாம் வீடு சுந்தரத்துக்கு, இந்த முறை படத்தை இயக்குகிற வாய்ப்பையும் வழங்கினார் சிவாஜி. பாரீஸ்டர் ரஜினிகாந்த் எனும் கேரக்டருக்கு அப்படியொரு கெளரவத்தை ஏற்படுத்தினார் நடிகர் திலகம்.
இப்படியாகத்தான்... வியட்நாம் வீடு சுந்தரம் எனும் அற்புதப் படைப்பாளி, தமிழ் கூறும் சினிமா உலகுக்கு வந்தார். தனித்துவ எழுத்துகளாலும் கேரக்டரைஸேஷன் எனும் பாத்திர உருவாக்கத்தாலும் பேரெடுத்தார்.
சரி... ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு எழுதிய நாடகமும் படமாயிற்று. முக்தா சீனிவாசன் இயக்கத்தில், வியட்நாம் வீடு சுந்தரம் கதை, வசனத்தில் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ என்ற படத்தில் பணிபுரிந்தார்.
இதேபோல், சித்ரா லட்சுமணன் தயாரித்து இயக்கி, கமல் நடித்த ‘சூரசம்ஹாரம்’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பணியாற்றினார்.
ஒரு படத்துக்கு, கதை எப்படி முக்கியமோ... அதைவிட கேரக்டர் அமைப்பது ரொம்பவே முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொருவிதமான பாத்திரங்களை வடிவமைப்பது ரொம்பவே நுணுக்கமான விஷயம். அப்படி கேரக்டர் உருவாக்குவதில் கில்லாடி என்று பேரெடுத்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். அதனால்தான் பிரஸ்டீஜ் பத்மநாபன், பாரீஸ்டர் ரஜினிகாந்த், பூண்டி கோயில் ஆன்டனி... எல்லோரும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட படைப்புத் திலகம் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் இன்று (ஆகஸ்ட் 6ம் தேதி) நினைவுநாள்.
பிரஸ்டீஸ் பத்மநாபன், பாரீஸ்டர் ரஜினிகாந்த், பூண்டி ஆன்டனி ஆகியோரையெல்லாம் நமக்கு காலம் உள்ளவரை நினைவு படுத்திக்கொண்டே இருப்பார் சிவாஜி. கூடவே... வியட்நாம் வீடு சுந்தரத்தையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT