Published : 03 Aug 2020 12:09 PM
Last Updated : 03 Aug 2020 12:09 PM
அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள்.
நேற்று (ஆகஸ்ட் 2) அமிதாப் பச்சனுக்கு கரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
வீடு திரும்பிய அமிதாப் பச்சன் தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். தற்போது அவருடைய வலைப்பூவில் அபிஷேக் சிகிச்சையிலிருப்பது மனம் வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமிதாப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனா வைரஸிலிருந்து குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளது நிறைவாக உள்ளது. ஆனால், அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது.
மருத்துவச் சூழல், பரிசோதனைகள், லேப் அறிக்கைகள், உடல்நலன் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிகச்சிறந்த நிபுணர்கள் இந்தத் தனித்துவமான சூழலில் இரவு பகலாகப் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு கணமும் ஆலோசனை நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்து, உலகம் முழுவதும் உள்ள தங்கள் சக மருத்துவர்களுடன் பேசி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஒவ்வொரு நிமிடமும் ‘அனைத்தும் சரி ஆகும்’ என்று எங்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர். வைரஸிடமிருந்து ஏராளமான உயிர்களைப் பாதுகாக்க மருந்து கண்டுபிடிக்க அவர்கள் போராடி வருகின்றனர்.
அவர்களை நான் ‘வெள்ளுடை தேவதைகள்’ என்று குறிப்பிட்டபோது, அவர்களின் சிறப்பான சேவைக்கு மத்தியில் நானும் படுத்திருப்பேன் என்று நான் கற்பனை செய்திருக்கவில்லை. போராடுவதற்கான ஊக்கத்தையும் வலிமையையும் நமக்கு அளிக்கிறார்கள். அவர்களின் பணி இன்றியமையாதது. அவர்களுக்கான எனது நன்றியுணர்வு எப்போதும் தீராது".
இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT