Published : 01 Aug 2020 02:51 PM
Last Updated : 01 Aug 2020 02:51 PM

'காக்க காக்க' வெளியாகி 17 ஆண்டுகள்: காவல்துறை படங்களுக்கான புது இலக்கணம் 

சென்னை

தமிழ் சினிமாவில் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்தே காவல்துறை அதிகாரியை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்றுவரை ஒரு நாயக நடிகர் காவல்துறை அதிகாரியாக நடிப்பது அவருடைய திரைவாழ்வின் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய காவல்துறைப் படங்களுக்கும் இப்போதைய காவல்துறைப் படங்களுக்கும் உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் பல வகையான மாற்றங்கள் வந்துள்ளன. அந்த மாற்றங்களுக்கு முக்கியப் பங்களித்த படம் என்று 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2003 ஆகஸ்ட் 1) வெளியான 'காக்க காக்க' படத்தைச் சொல்லலாம்.

முதல் படத்திலிருந்து முற்றிலும் வேறு

2001-ம் ஆண்டில் வெளியான 'மின்னலே' மிகப் பெரிய வெற்றிபெற்று தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனனின் இரண்டாம் படம் 'காக்க காக்க'. ஒரு காதல் படத்தை எடுத்துவிட்டு அது வெற்றி அடைந்த பிறகும் அடுத்த படத்திலேயே முழுமையாக ட்ராக் மாறி ஆக்‌ஷன் கதையைக் கையிலெடுப்பது அந்தக் காலகட்டத்தில் அரிதானது. படைப்பாளி அதைச் செய்ய விரும்பினாலும் தொழில் சூழல் அதை அனுமதிக்காது. ஆனால், கெளதம் மேனன் கூறிய கதை அப்போது முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைத்திருந்த நடிகர் சூர்யாவுக்கும் பெரிய பட்ஜெட் படங்களுக்காகவும் சிறந்த விளம்பர உத்திகளுக்காகவும் பெயர் பெற்றிருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கும் பிடித்திருந்தது. அதனாலேயே 'காக்க காக்க' படம் உருவானது.

அன்புச்செல்வன் என்னும் ஆதர்சம்

இந்தப் படத்தில் உதவி ஆணையரும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆக நடிக்க சூர்யா அசாத்தியமான உழைப்பைச் செலுத்தினார். ஒரு அசலான ஐபிஎஸ் அதிகாரியின் கட்டுக்கோப்பான உடலமைப்பைக் கொண்டுவந்தார். காவல்துறை அதிகாரிகளாக நடிப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாகவே நாயக நடிகர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது இன்று தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. இந்தப் போக்குக்கு அதை எதிர்பார்க்கும் ரசனை மாற்றத்துக்கு வித்திட்டவர்கள் என்று 'காக்க காக்க' படத்தையும் சூர்யாவின் அன்புச்செல்வனையும் சொல்லலாம். அவருடைய உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் உரிய பலனாக இந்தப் படம் அவரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயக நடிகராக்கியது. நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுக்கொடுத்தது.

துப்பாக்கி மோதலும் அழகான காதலும்

இந்தப் படத்தில்தான் முதல் முறையாக என்கவுன்ட்டர் என்ற வார்த்தை தமிழ்ப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. குற்றவாளிகளுடனான மோதலில் காவல்துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குற்றவாளிகளைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல நேர்வதுதான் என்கவுன்ட்டர். ஆனால் நடைமுறையில் அது சட்டத்துக்கு அப்பாற்பட்ட வேறு வடிவங்களை எடுத்துவிட்டது. காவல்துறை என்கவுன்ட்டர் நிகழ்வுகளை வைத்துப் பல சுவாரஸ்யமான காட்சிகளைக் கொண்ட திரைக்கதை அமைந்திருந்தது 'காக்க காக்க' படத்துக்கு ஒரு புதுமை உணர்வைக் கொடுத்தது. படத்தின் வெற்றிக்கும் இந்த அம்சம் பெரும் பங்களித்தது. அதே நேரம் காவல்துறை வன்முறையைப் பெருமைப்படுத்திய படம் என்ற விமர்சனமும் இந்தப் படத்தின் மீது வைக்கப்படக் காரணமாக அமைந்தது.

ஆனால், என்கவுன்ட்டர் என்பதைத் தாண்டி காவல்துறையினர் சமூகத்தைப் பாதுகாக்கும் பணியில் அவர்களின் ரத்த சொந்தங்களை அன்புக்குரிய உறவுகளை இழக்க வேண்டியிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்த முதல் படம் 'காக்க காக்க'. அதன் மூலம் காவல்துறை அதிகாரிகளின் இழப்புகள் உணர்வுபூர்வமாக அதே நேரம் மெலோடிராமா இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்தன. உள்ளடக்கம் காவல்துறை கதை என்றாலும்.

'மின்னலே' படத்தில் வெளிப்படுத்திய ரசனையான காதல் காட்சிகளை அமைக்கும் திறனை இந்தப் படத்திலும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் கெளதம் மேனன். சூர்யா - ஜோதிகா இணையில் காதல் காட்சிகள் மிக அழகாகவும் புத்துணர்வளிப்பதாகவும் அமைந்திருந்தன. நாயகியான மாயா கதாபாத்திரத்தை சுய சிந்தனை உள்ள மரியாதைக்குரிய பெண்ணாகச் சித்தரித்திருந்தார் கெளதம். பெண்களைக் கண்ணியமாகவும் நவீனப் பார்வையுடனும் சித்தரிப்பதற்கான ஒரு புதிய முன்மாதிரியை உருவாக்கினார்.

சூர்யா - ஜோதிகா காதல் ஜோடிகளாகி நிஜவாழ்வில் ஒன்றிணைந்துவிட்டனர். இதற்கு முன்பே இவர்கள் இருவரும் சில படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் சூர்யா - ஜோதிகா ஜோடிக்கென்றே தனி ரசிகர் படை உருவானது 'காக்க காக்க' படத்தின் மூலமாகத்தான். அதுவும் திரைப்படத்தில் காதலர்களுக்கிடையிலான பொருத்தமும் நெருக்கமும் (கெமிஸ்ட்ரி) எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான புது இலக்கணமாக சூர்யா - ஜோதிகா ஜோடி இப்படத்தில் திகழ்ந்தது.

நாயகனுக்கு இணையான வில்லன்

வில்லன் கதாபாத்திரத்தையும் வலுவானதாகப் படைத்திருந்தார் கௌதம். 'பாட்ஷா' ஆண்டனிக்குப் பிறகு 'காக்க காக்க' பாண்டியா தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றானது. அதில் நடித்திருந்த ஜீவனின் உழைப்பும் உருமாற்றமும் அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. நாயகனுக்கு இணையான திறமையும் புத்திசாலித்தனம் நிறைந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் அளித்தது.

உயர்தர உருவாக்கம்

உள்ளடக்கம் மட்டுமல்லாமல் உருவாக்கத்திலும் அதுவரை வந்த காவல்துறை படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு ஒரு புதிய போக்கை உருவாக்குவதாக அமைந்திருந்தது 'காக்க காக்க'. படத்தின் தொடக்கக் காட்சியில் குண்டடிபட்டு குளத்தில் மயக்க நிலையில் மூழ்கியிருக்கும் நாயகன் திடீரென்று மயக்கம் தெளிந்ததிலிருந்து வெளியேறுவது தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் ஒளியும், ஒலியும், கோணங்களும் ஷாட்கள் மாறும் வேகமும் ரசிகர்களை வியக்க வைத்தன. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பாளர் ஆண்டனி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் தமது பணியைச் செம்மையாகச் செய்து படத்தின் தொழில்நுட்பத் தரத்தை வேறோரு உயரத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். கெளதமுடனான இந்த மூவரின் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. கெளதம் படம் புதிய தொழில்நுட்பத் தரம், நவீனமயமான உருவாக்கம் ஆகியவற்றுக்காக அறியப்படுவதற்கு இந்தப் படமே தொடக்கப் புள்ளி.

அனைத்துப் பாடல்களும் வெற்றி

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீ பாடிய 'ஒன்றா ரெண்டா ஆசைகள்' பாடல் காதலர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஹாரிஸ்-பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணியில் பல சிறப்பான பாடல்கள் அமைய இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. 'உயிரின் உயிரே', 'என்னைக் கொஞ்சம் மாற்றி', 'ஒரு ஊரில் அழகே உருவாய்', 'தூது வருமா' என அனைத்துப் பாடல்களுமே மிகப் பெரிய வெற்றிபெற்றன. இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமல்லாமல் பாடகர்கள் கார்த்திக், கேகே, சுனிதா சாரதி என பல இளம் திறமைகளுக்கு முக்கியமான வெற்றியாக இந்தப் படமும் பாடல்களும் அமைந்தன.

இப்படி உள்ளடக்கத்திலும் உருவாக்கத்திலும் உயர்ந்த தரத்துடன் அமைந்திருந்த 'காக்க காக்க' படத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத படமாகவும் அமைந்திருப்பதுதான் அதன் ஆகச் சிறந்த வெற்றி என்று சொல்லலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x