Published : 29 Jul 2020 10:00 PM
Last Updated : 29 Jul 2020 10:00 PM
சன் டிவி ட்வீட்டினால் ஏற்பட்ட குழப்பத்திற்கு, 'சித்தி 2' குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.
தற்போது ஊரடங்கு தளர்வுகளால் சின்னத்திரை படப்பிடிப்பு எந்தவித இடைஞ்சலுமின்றி சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்துத் தொலைக்காட்சி நிறுவனங்களுமே சீரியல்களின் புதிய அத்தியாயங்களை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன.
இதனிடையே சன் தொலைக்காட்சி தங்களுடைய சீரியல்களின் நேரம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் புகைப்படமொன்றை வெளியிட்டது. அதன்படி இரவு 7:00 -8:00 'ரோஜா', 8:00 - 8:30 'கல்யாண வீடு', 8:30 - 9:00 'கண்மணி' மற்றும் 9:00 - 10:00 'நாயகி' ஆகியவை ஒளிபரப்பாகும் என்று தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக 9 மணியளவில் ஒளிபரப்பாகும் 'சித்தி 2' சீரியலின் பெயர் இதில் இடம்பெறவில்லை. இதனால் 'சித்தி 2' ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்தார்கள். இது தொடர்பாக 'சித்தி 2' குழுவினர் மத்தியில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:
" ’சித்தி 2’ சீரியல் படப்பிடிப்பு படுஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இரவு 9:30 மணியளவில் ஒளிபரப்பாகும். தற்போது எந்தவொரு தொய்வும் இனிமேல் இருக்கக் கூடாது என்பதால் படுவேகமாக படப்பிடிப்பு செய்து கொண்டிருக்கிறோம்.
'சித்தி 2' சீரியல் தொடங்கும்போது இரவு 9:30 மணிக்குதான் ஒளிபரப்பானது. பின்பு 9:00 மணிக்கு ஒளிபரப்பு என்று மாறியது. தற்போது மீண்டும் வழக்கமான 9:30 மணிக்கே ஒளிபரப்பாகவுள்ளது. எந்தவிதக் குழப்பமும் அடையத் தேவையில்லை".
இவ்வாறு 'சித்தி 2' குழுவினர் தெரிவித்தார்கள்.
'சித்தி 2' ஒளிபரப்பு தொடங்கும் வரை மட்டுமே, 'நாயகி' சீரியல் ஒரு மணி நேர கால அளவுக்கு ஒளிபரப்பாகவுள்ளது. பின்பு அரை மணி நேரமாகக் குறைக்கப்படவுள்ளது.
உங்கள் மாலை நேரத்தை மேலும் இனிமையாக்க.. உங்கள் மனதை தொட்ட தொடர்கள்.. #SunTV #SerialsOnSunTV #PudhusungammaPudhusu pic.twitter.com/l3rHdoFfLA
— Sun TV (@SunTV) July 29, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT