Published : 28 Jul 2020 09:46 PM
Last Updated : 28 Jul 2020 09:46 PM
மனநிலை சரியில்லை என்று என்னை பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ட்வீட் செய்துள்ளார் ஓவியா.
தமிழில் 2017-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கமல் தொகுத்து வழங்கினார். 'பிக் பாஸ்' சீசன்-1 நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஓவியா.
சமூக வலைதளங்களில் 'ஓவியா ஆர்மி' என்ற பெயரில் நிறையப் பக்கங்கள் தொடங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே வந்தவுடன், அவர் எங்கு சென்றாலும் பெருங்கூட்டம் கூடியது. ஆனால், அவரோ அந்தப் பிரபலத்தைத் திரையுலகில் பயன்படுத்தவில்லை.
எப்போதாவது சமூக வலைதளப் பக்கத்துக்கு வரும் ஓவியா, ஜூலை 26-ம் தேதி அன்று "பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த ட்வீட் பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அப்போது அந்தப் பதிவுக்கு, "ஆம். தடை செய்ய வேண்டும்" என்று ரசிகர் ஒருவர் பதிலளித்தார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ஓவியா, "போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும்வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தெரிவித்தார். இந்தப் பதிவுப் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை உருவாக்கியது.
இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை செய்ய வேண்டும் என்ற பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் சிலவற்றுக்கு இன்று (ஜூலை 28) பதிலளித்துள்ளார் ஓவியா.
அந்தப் பின்னூட்டங்களும் ஓவியா அளித்துள்ள பதில்களும் அப்படியே...
பின்னூட்டம்: பணம், புகழ் கிடைக்கும் என்பதால் நீங்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டு இப்போது வந்து இப்படிச் சொல்கிறீர்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே ஏன் அதை முழுமையாகப் படித்து, சாதக பாதகங்களைத் தெரிந்துகொண்டு ஒப்புக்கொள்ளக் கூடாது.
ஓவியா: மற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டுவதற்கான அங்கீகாரமாக ஒப்பந்தப் பத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு உயிரும் முக்கியம். அந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாகத் தடை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நாங்களும் மனிதர்கள்தான்.
பின்னூட்டம்: இப்போது இந்த சர்ச்சை வரக் காரணம் என்ன? இது இப்போதைய சர்ச்சையா அல்லது 2017-ல் எழுந்ததன் நீட்சியா?
ஓவியா: தமிழகத்திலும் ஒரு சுஷாந்த் சிங்கை நான் பார்க்க விரும்பவில்லை. அது என் தவறே.
பின்னூட்டம்: 'பிக் பாஸ்' சீசன் 1 முடிந்த பிறகே நீங்கள் இதைச் சொல்லியிருக்கலாமே மேடம். எதற்காக 3 வருடங்கள் கழித்து இந்த சர்ச்சையைக் கிளப்புகிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?
ஓவியா: அதை எப்படி நான் சொல்ல இயலும் சார். ஏற்கெனவே எனக்கு மனநிலை சரியில்லை என்று பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்போது கூட எனது மன ஆறுதலுக்காகவே இதை நான் சொல்கிறேன். இதனால், இந்த நஞ்சு தோய்ந்த உலகில் எதுவும் மாறப்போவதில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT