Published : 26 Jul 2020 08:10 PM
Last Updated : 26 Jul 2020 08:10 PM
கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையைத் தாண்டி இப்போது பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துவிட்டது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.
நேற்று (ஜூலை 25) மாலை விஷாலுக்கும், அவருடைய தந்தை ஜி.கே.ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்தார் விஷால்.
தற்போது கரோனா தொற்றிலிருந்து மீண்டது தொடர்பாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில் கரோனா தொற்று உறுதியானது. நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. நான் எந்தவொரு மருத்துவமனைக்கும் எதிரானவன் அல்ல, ஆகையால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
வீட்டிலேயே அப்பாவைக் கவனித்துக்கொண்டேன். அப்பாவைக் கவனித்துக் கொள்ளும்போது, எனக்கும் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லை. நான் ஆயுர்வேத மாத்திரை எடுத்துக்கொண்டேன். என்னுடைய மேலாளர் ஹிரிக்கும் கரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கின.
ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டோம். அதன் மூலம் 4 நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது. 7 நாட்களில் முழுமையாகக் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன். இதை ஆயுர்வேத மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. எங்களை என்ன விஷயம் காப்பாற்றியது என்று சொல்வதற்காகவே இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறேன். மருத்துவர் ஹரிக்கு எனது நன்றி.
மருத்துவர்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன். கரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது வந்துவிடுமோ என்று முதலில் பயப்படாதீர்கள். அதுதான் முதல் மாத்திரை. இந்தப் பயம் மட்டுமே பாதிப் பேரை இக்கட்டான சூழலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கரோனாவுக்கு முக்கியமான மருந்தே முதலில் பயப்படாதீர்கள். கண்டிப்பாக கரோனா வைரஸை எதிர்ப்பேன் என்று மன தைரியம் இருக்க வேண்டும். அந்த மன தைரியத்துடன் மருந்துகள் எடுத்துக் கொண்டால், கண்டிப்பாகக் குணமாகலாம்.
அப்படித்தான் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார். அவருடைய மன உறுதியினால் மட்டுமே எனக்கு வந்த தொற்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டேன். என் தந்தை, நான், மேலாளர் ஹரி மூவருமே கரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம்.
எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம். இந்த வீடியோ எந்தவொரு மருத்துவருக்கோ, மருத்துவத்துக்காகவோ பகிரவில்லை. யாருக்கும் எதிர்ப்பும் தெரிவிக்க இந்த வீடியோவை வெளியிடவில்லை. இன்னொரு மனிதனுக்கு மனிதனாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன்".
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT